Published : 15 May 2014 09:59 PM
Last Updated : 15 May 2014 09:59 PM

ராஜஸ்தான் பந்துவீச்சில் சுருண்டு விழுந்தது டெல்லி: தொடர்ந்து 6-வது தோல்வி

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 62 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்ற்து. இது அந்த அணி பெரும் 6-வது தொடர் தோல்வியாகும். இந்தத் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



202 ரன்களை விரட்டிய டெல்லி அணி துவக்கத்திலிருந்தே ராஜஸ்தான் அணியை ஆதிக்கம் செலுத்த விட்டது அந்த அணி வீரர்களின் மனச்சோர்வை காட்டியது. பவர் ப்ளே ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி, அதற்குள்ளாகவே அகர்வால் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.

ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியின் வீரர்களால் சூழலுக்கு ஏற்ப ஆட முடியாமல் போனது. டுமினி 8 ரன்கள், பீட்டர்சன் 13 ரன்கள், டெய்லர் 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற 10-வது ஓவரின் முடிவில் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் டெல்லி தத்தளித்தது.

நிலை கைமீறிப் போனதை உணர்ந்த டெல்லி வீரர்கள் மேற்கொண்டு முயற்சி செய்வதை விடுத்து ராஜஸ்தானின் பந்துவீச்சில் சரண் அடைந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே டெல்லியால் எடுக்க முடிந்தது. இந்தத் தோல்வியின் மூலம், தொடர்ந்து புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் டெல்லி தேங்கி நிற்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் நாயர் மற்றும் ரஹானே சீராக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். பவர்ப்ளே முடியும் முன்பே நாயர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடவந்த கூப்பர் தான் சந்தித்த 2-வது பந்தை அதிரடியாக சிக்ஸருக்கு விளாசினார். 32 ரன்கள் எடுத்திருந்த போது, திட்டமிடாமல் மட்டையை சுழற்றிய கூப்பர் 32 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாம்சன், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து வலுவான இலக்கை நோக்கி அணியை முன்னெடுத்துச் சென்றார். இந்த இணை 39 பந்துகளில் 74 ரன்களை விரைவாகச் சேர்த்தது.

45 பந்துகளில் அரை சதம் கடந்த ரஹானே 64 ரன்களுக்கு (50 பந்துகள், 8 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். 18-வது ஓவரில் களமிறங்கிய பின்னி, வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆனார். அதே ஓவரில் சாம்சனும் 40 ரன்களுக்கு வெளியேற ஃபால்க்னர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஆடும் கட்டிங்குடன் களத்தில் இணைந்தார்.

கடைசி 2 ஓவர்களில் இந்த இணை 32 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை 201 ரன்களுக்கு உயர்த்தியது. குறிப்பாக ஃபால்க்னர் 8 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x