

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் நாயர் மற்றும் ரஹானே சீராக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். பவர்ப்ளே முடியும் முன்பே நாயர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடவந்த கூப்பர் தான் சந்தித்த 2-வது பந்தை அதிரடியாக சிக்ஸருக்கு விளாசினார். 32 ரன்கள் எடுத்திருந்த போது, திட்டமிடாமல் மட்டையை சுழற்றிய கூப்பர் 32 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாம்சன், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து வலுவான இலக்கை நோக்கி அணியை முன்னெடுத்துச் சென்றார். இந்த இணை 39 பந்துகளில் 74 ரன்களை விரைவாகச் சேர்த்தது.
45 பந்துகளில் அரை சதம் கடந்த ரஹானே 64 ரன்களுக்கு (50 பந்துகள், 8 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். 18-வது ஓவரில் களமிறங்கிய பின்னி, வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆனார். அதே ஓவரில் சாம்சனும் 40 ரன்களுக்கு வெளியேற ஃபால்க்னர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஆடும் கட்டிங்குடன் களத்தில் இணைந்தார்.
கடைசி 2 ஓவர்களில் இந்த இணை 32 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை 201 ரன்களுக்கு உயர்த்தியது. குறிப்பாக ஃபால்க்னர் 8 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.