Last Updated : 11 Sep, 2020 05:10 PM

Published : 11 Sep 2020 05:10 PM
Last Updated : 11 Sep 2020 05:10 PM

ஐபிஎல் தொடரில் வலுவான பந்துவீச்சை கொண்ட அந்த 3 அணிகள் யார்?


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 13-வது ஐபிஎல்டி20 போட்டி தொடங்க இருக்கும் நிலையில், 8 அணிகளின் வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளுக்கும் ஒவ்வொரு வகையான தனித்திறமையும், சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. அந்த வகையில் பந்துவீச்சுக்கு தனிமுக்கியத்துவம் கொடுத்து சில அணிகள் தங்கள் வீரர்களை தயார் செய்து வருகின்றன.

ஐபிஎல் தொடரில் சில நேரங்களில் பேட்ஸ்மேன் சொதப்பி, அணியின் ரன் எண்ணிக்கை குறையும் போது, அதை வைத்து எதிரணியைச் சுருட்டுவது பந்துவீச்சாளர்களின் திறமையில்தான் இருக்கிறது. ஆதலால், பந்துவீச்சுக்கு அனைத்து அணிகளும் முக்கியத்துவம் அளித்தாலும் சில அணிகளின் பந்துவீச்சு மட்டும் தனித்து தெரிகிறது. சிறப்பாகவும் வரும் தொடரில் செயல்பாடுவார்கள் எனத் தெரிகிறது.

அந்த அணிகள், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசரஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளிடமும் வலுவான பந்துவீச்சு இருக்கிறது

சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவர் புதிய பந்தில் பந்துவீசுவதற்கு தோனியால் நம்பிக்கையைப் பெற்றவர்கள். டெத் ஓவர் ஸ்பெலிஸ்டாக அனுபவ வீரர் டிவைன் பிராவோவை தோனி வைத்துள்ளார். இவர்கள் மூவரும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஷேன் வாட்ஸன் இருந்தாலும் பெரும்பாலும் அவர் பந்துவீசுவதில்லை.

இது தவிர லுங்கி இங்கிடி இடம் பெற்றிருந்தாலும் கடந்த தொடரில் அவர் விளையாடவில்லை இருப்பினும் இந்த தொடரில் அவரின் வருகை சிஎஸ்கே அணிக்கு பலத்தை தரும். ஏனென்றால் கடந்த 2018-ம் ஆண்டு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இங்கிடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால், 6 ரன்ரேட் மட்டுமே வைத்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட், சாம் கரன், என்று இரு இளம் பந்துவீச்சாளர்கள் இருப்பது நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த உதவுவார்கள். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பதம்பார்த்துள்ள ஹேசல் வுட் 82 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி 7 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளது சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாகும்

ஐபிஎல் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் அறிமுகமான சாம் கரன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அனைவரையும் திருப்பிப்பார்க்க வைத்தார். இவரின் வருகையும் சிஎஸ்கே அணிக்கு குறிப்பிடத்தகுந்த வலுவைத் தரும்.

சுழற்பந்துவீச்சுப் பிரிவில் இந்த முறை ஹர்பஜன் சிங் ஆடாதது பின்னடைவாக இருந்தாலும், பியூஷ் சாவ்லா வந்துள்ளார். இது தவிர இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா, கரன் சர்மா, மிட்ஷெல் சான்ட்னர் என பல்வேறு வகைகளைக் கொண்ட சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.

மணிக்கட்டில் பந்துவீசுபவர்கள், லெக்ஸ்பின்னர், ஆஃப் ஸ்பின்னர் என பல வகைகளிலும் பந்துவீச்சாளர்கள் இருப்பது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலம். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஐக்கி அரபுஅமீரகத்தில் சிஎஸ்கே மிரட்டலாக செயல்படும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி

இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணியாக கருதப்படுவது டெல்லி கேபிடல்ஸ் அணி. பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் வலுவாக இருக்கிறது.

அதிலும் பந்துவீச்சில் எந்த அணியையும் சுருட்டும் வகையில் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் மிரட்டலான வீரர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில் காகிசோ ரபாடா, இசாந்த் சர்மா ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் சந்தீப் லாமிசானே, இடதுகை சுழற்பந்துவீச்சாலர் அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா, ரவிச்சந்திர அஸ்வின் என அனுபவம் மிகுந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இசாந்த சர்மா, ரபாடா இருவரும் கடந்த ஐபிஎல் தொடரில் கலக்கிவிட்டனர். சிறந்த எக்கானமி ரேட்டை வைத்திருந்தார் இசாந்த், ஒருவிக்கெட்டில் பர்பில் கேப்பை இழந்தார் ரபாடா. ஆதலால், இருவரும் இந்த முறையும் மிரட்டுவார்கள் என நம்பலாம்.

ரபாடா,இசாந்த் சர்மா தங்களின் தொடக்க ஓவர்களை முடித்தபின் நடுப்பகுதியில் பந்துவீச மோகித் சர்மா, கீமோ பால், மார்கஸ் ஸ்டானிஸ், ஆவேஷ் கான், ஆன்ரிச் நார்ட்ஜே இந்த வீரர்கள் அனைவரும் சராசரியாக 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்கள்.

ஆட்டம் சூடுபிடிக்கும் நடுப்பகுதியில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் பந்துவீசக்கூடியவர்கள். அதிலும் ஸ்டானிஸ், கீமோ பால், நார்ட்ஜே ஆகியோர் ஆல்ரவுண்டர்களாகவும் இருப்பதால், டெல்லி அணிக்கு கூடுதல் பலமாகும். இந்த முறை டெல்லி அணி சுழற்பந்தவீச்சிலும் வேகப்பந்துவீச்சிலும் வலுவாக களமிறங்குகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எதிர்பாராத நேரங்களில் அதிர்ச்சித் தோல்வியையும், அனைத்து அணிகளுக்கும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிம்மசொப்னமாக இருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் அணிக்கு பேட்டிங்கில் டேவிட் வார்னர், வில்லியம்ஸன் இருப்பது மிகப்பெரிய பலமாகும்.

அதேபோல பந்துவீச்சில் புவனேஷ் குமார், ரஷித் கான், பாசில் தம்பி, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், கலீல் அகமது, ஷான்பாஸ் நதீம், முகமது நபி என வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் தகுதியான, சரியான கலவையில் வீரர்கள் அமையப்பெற்றுள்ளார்கள்.

2017-ம் ஆண்டில் வளர்ந்துவரும்வீரர் விருதை பாசில் தம்பி வென்றவர், லெஸ் ஸ்பின்னால் அனைத்து அணிகளுக்கும் குடைச்சல் கொடுக்கும் ரஷித் கான், ஆஃப் ஸ்பின்னில் அசத்தும் முகமது நபி ஆகியோரை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

புவனேஷ்வர் குமார்,சந்தீப் சிங் பந்துவீச்சைத் தொடங்குவார்கள். இதில் சந்தீப்சிங் அதிகமான அளவில் எதிரணிகளுக்கு விரல் மூலம் ரிலீஸ் செய்யும் வேகம் குறைவான பந்துகளை வீசி திணறடிப்பவர்.

நடுப்பகுதியில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப ரஷித் கான், முகமது இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில் மாற்றத்தை கொண்டுவர கலீல் அகமது, சித்தார்த் கவுல், பாசில் தம்பி இருப்பது எதிரணியை கட்டுக்குள் வைக்க உதவுவார்கள்.

இது தவிர தேவைப்பட்டால் பந்துவீசுவதற்காக ஆல்ரவுன்டர் விஜய் சங்கர், மிட்ஷெல்மார்ஷ், இடது கை சுழற்பந்துவீச்சாளர் பேபியன் ஆலென், பில்லி ஸ்டேன்லேக் போன்றோர் இருப்பது மாற்றுவீரர்கள் வரிசையிலும் பலமாகவே இருப்பதை காட்டுகிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்த 3 ஆணிகளின் பந்துவீச்சும் வரும் ஐபிஎல் தொடரில் முக்கியமாகப் பேசப்படும் என்பதில் வியப்பில்லை. எதிரிணிகள் இந்த 3அணிகளிடம் பந்துவீச்சில் சரணடையப் போவதை பார்க்க முடியும்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x