

ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாவிட்டாலும் அணியில் போதிய அனுபவமும் தரமும், போட்டிகளில் ஆடி ஆடி கடினமாகியுள்ள வீரர்களும் இந்த முறையும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வாய்ப்பை ஏற்படுத்துவார்கள் என்று சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
நபீல் ஹஷ்மியின் யூ டியூப் ஷோவில் ஷேன் வாட்சன் கூறியதாவது:
அனுபவ வீரர்களாக இருப்பதால் கடினமான சூழ்நிலையிலும் கூட திறமையை வெளிப்படுத்துவது குறித்து கஷ்டம் இருக்காது.
அதனால்தான் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக எங்களுக்கு அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தரமும் அனுபவமும் இருக்கிறது.
தரமும் அனுபவமும் இருப்பதால் நிறைய தவறுகளைச் செய்ய வாய்ப்பில்லை. இன்னும் கொஞ்சம் வேகம் கூட்ட வேண்டும் அவ்வளவே.
கடந்த 4 ஆண்டுகளாக டி20 தொடரில் ஆடுவதும் ஆடாததுமாக இருந்து வருகிறேன், இப்போது எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது, ஆனாலும் திறமையை மேம்படுத்துவது சவாலானதுதான்.
2018 ஐபிஎல் சீசன், எனக்கு சிறப்பாக அமைந்தது. சதமடித்த இறுதிப் போட்டி மட்டுமல்ல. கடந்த ஆண்டு சிஎஸ்கே என்னை தக்கவைத்தது. மற்ற அணிகளாக இருந்தால் ரன்கள் இல்லாததற்கு நிச்சயம் விலக்கியிருப்பார்கள், ஆனால் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அந்த இன்னிங்ஸிக்கு முன்னால் கூட என்னை சிஎஸ்கே காத்தது.
அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்ததால் அடுத்த சில நல்ல இன்னிங்ஸ்கள் என்னிடமிருந்து வரும் என்பது எனக்கு தெரிந்தது. உலகத்தரம் வாய்ந்த கேப்டன்கள்தான் இத்தகைய நம்பிக்கையை ஒரு வீரர் மீது வைப்பார்கள், இவ்வாறு கூறினார் வாட்சன்.