Last Updated : 30 Sep, 2015 05:13 PM

 

Published : 30 Sep 2015 05:13 PM
Last Updated : 30 Sep 2015 05:13 PM

பயிற்சிப் போட்டி தோல்வியை வைத்து தென் ஆப்பிரிக்காவை எடைபோட முடியாது: ரோஹித் சர்மா

பயிற்சி டி20 கிரிக்கெட்டில் மயங்க் அகர்வால் மற்றும் மனன் வோராவின் அற்புதமான பேட்டிங்கினால் இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த பயிற்சி டி20 கிரிக்கெட் தோல்வியை வைத்து தென் ஆப்பிரிக்காவை நாம் எடைபோடக் கூடாது என்கிறார் ரோஹித் சர்மா.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்க-இந்திய அணிகள் முதல் டி20 போட்டியில் மோதுகின்றன. தரம்சாலாவில் இந்தப் போட்டி நடைபெறுவதால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறியதாவது:

"இது பயிற்சி ஆட்டம். இதில் பயணிக்கும் அணி பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்வார்கள், வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். அதனால் நேற்றைய தென் ஆப்பிரிக்க தோல்வியைக் கொண்டு அந்த அணியை எடைபோடுவது கூடாது. டி20 மட்டுமல்ல கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் மிகவும் பலம் வாய்ந்த அணி தென் ஆப்பிரிக்கா.

ஒரு அணியாக நாங்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் அனுபவம் கைகொடுக்கும். ஆனால், டி20-கிரிக்கெட்டில் ஒரு அணியாக ஒன்று திரண்டு ஆடுவது சவாலான விஷயமே.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் வரவுள்ளது, எனவே இந்தப் போட்டி முதல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையைக் காண்பிப்பது அவசியம். தென் ஆப்பிரிக்க அணியும் அதிகம் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதில்லை.

வேகப்பந்து வீச்சுக்கு தரம்சலா பிட்ச் சாதகமாக இருக்கும், ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சு மட்டுமல்ல, தரமான ஸ்பின்னர்களும் உள்ளனர்.

மேலும், இந்தியாவுக்கு வெளியே நிறைய ஆடிவருகிறோம், இதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆட்டக்களம் பற்றி கவலையில்லை.

மேலும் இந்திய அணி இங்கு முன்னதாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், இது நிச்சயம் கைகொடுக்கும். கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். இவையெல்லாவற்றையும் விட இந்த அழகான மைதானத்தில் விளையாடுவதே அருமைதான். உலகின் 5 முதல் தர கிரிக்கெட் மைதானங்களில் இதுவும் நிச்சயமாக ஒன்று என்றே நான் கருதுகிறேன். இந்தியாவுக்கு வெளியேயும் நான் தரம்சலா மைதானம் போல் கண்டதில்லை.

அணிக்காக கூடுதலாக பங்களிப்பு செய்வேன். தென் ஆப்பிரிக்க வீரர்களில் பலர் ஐபில் கிரிக்கெட்டில் ஆடி வருபவர்கள். எங்களுக்கு அவர்களையும் அவர்களுக்கு எங்களையும் நன்றாக தெரியும்.

விராட் கோலி, தோனி இருவரும் வெவ்வேறு வகையான கேப்டன்கள். இவர்கள் இருவரின் கேப்டன்சிக்கு தக்கவாறு நடந்து கொள்வதில் சிரமம் இல்லை. தோனி அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக இருந்த போது பெரிய அளவில் வெற்றி பெற்றோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x