ஈஸ்வர் பாண்டே அபாரம்: இந்தியா ஏ இன்னிங்ஸ் வெற்றி

ஈஸ்வர் பாண்டே அபாரம்: இந்தியா ஏ இன்னிங்ஸ் வெற்றி
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்ற வங்கதேச ஏ அணிக்கு எதிரான 3 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 228 ரன்களை வங்கதேச ஏ அணி எடுக்க, இந்தியா ஏ அணி கேப்டன் ஷிகர் தவணின் அதிரடி 150 ரன்களுடன் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச ஏ அணி 36/2 என்று இன்று தொடங்கி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஏ இன்னிங்ஸ் மற்று 32 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்தியா ஏ தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே, ஜே.யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அபிமன்யு மிதுன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச அணியில் காயம் காரணமாக ரூபல் ஹுசைன் களமிறங்கவில்லை.

இன்று மொமினுல் ஹக், லிட்டன் தாஸ் இறங்கி தொடக்கத்தில் தன்னம்பிக்கையுடன் ஆடினர். வருண் ஆரோனின் முதல் 4 ஓவர்களில் 24 ரன்கள் வந்தது. 3-வது விக்கெட்டுக்காக 61 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டணி நிலைக்கவில்லை.

காரணம் ஈஸ்வர் பாண்டே, 38 ரன்கள் எடுத்த லிட்டன் தாஸ் மற்றும் அதே ஓவரில் முதல் இன்னிங்ஸ் சதநாயகன் சபீர் ரஹ்மான் ஆகியோரை வீழ்த்தினார். லிட்டன் தாஸுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசி ஆஃப் ஸ்டம்பை பெயர்த்தார் பாண்டே. சபீர் ரஹ்மானுக்கு நடுவர் எல்.பி. தீர்ப்பளித்தார். தீர்ப்பின் மீது சபீருக்கு திருப்தி இல்லை. மட்டையில் பட்டதாக அவர் அடையாளம் காட்டினார்.

நசீர் ஹுசைன் தளர்வாக ஒரு தடுப்பாட்டம் ஆட அபிமன்யு மிதுன் பந்து ஸ்டம்புக்கு உருண்டு சென்று தொந்தரவு செய்தது. ஷுவாகத ஹோம் வைடு பந்தை துரத்தி மிதுன் பந்தில் கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மோமினுல் ஹக் ஒரு முனையில் சில நல்ல ஷாட்களை ஆடி வந்த நிலையில் 54 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ்வின் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஒன்றுமில்லை. 39.3 ஓவர்களில் வங்கதேச ஏ அணி 151 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

அதிக ஓவர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் பாணி ஆட்டத்துக்கு தங்கள் அணி இன்னும் தயாராகவில்லை என்று வங்கதேச ஏ கேப்டன் மொமினுல் ஹக் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in