

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் கடைசி தருணத்தில் தோல்வியடைய நேரிட்ட தென் ஆப்பிரிக்க அணியின் மனநிலை குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.
ஐசிசி இணையதளத்தில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. சில துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள் சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் கிரிக்கெட் ஆட்டத்தில் சிலதில் வெற்றியும் சிலதில் தோல்வியும் ஏற்படுவது சகஜமானதுதான். அந்த நாளில் எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை நியூஸிலாந்து அணியினர் ஆடியதற்கு நாம் பாராட்டுகளை தெரிவிப்பதுதான் முறை” என்றார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 66 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தது பற்றி கூறும்போது, “அந்த ஆட்டம் தெளிவற்றது. அது பித்துப்பிடித்த தினமாக அமைந்தது. என்ன நடந்தது என்று இன்றும் கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் மகிழ்ச்சியடைந்த நாளாகும் அது. இவ்வகையான ஆட்டங்கள் எனக்கு சிறப்பு வாய்ந்தவை. சாதனைகள் குறித்து கர்வம் கொள்பவன் நானல்ல. ஒருவேளை ஓய்வு பெற்ற பிறகு பெருமையுடன் இந்த இன்னிங்ஸ்களை நான் நினைத்துப் பார்க்கலாம்.
என் கால்கள் தரையில்தான் இருக்கின்றன. நான் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் என்றெல்லாம் ஒருபோதும் நினைப்பதில்லை. ஒவ்வொரு இன்னிங்ஸ் போதும் பதட்டமாகவே உணர்கிறேன், கடுமையாக உழைக்கிறேன். சிறந்த இன்னிங்ஸ்கள் சுலபத்தில் வந்துவிடுவதில்லை, அது பார்ப்பதற்கு எளிதாக தெரியும்.
என்னை ஏதோ மகாமனிதனாக ஒருவரும் பார்க்கவில்லை என்றே கருதுகிறேன். நான் இந்திய வீரர்கள் பலருடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் சகஜமாக பழகியுள்ளேன். நான் ஒரு ஜெண்டில் பெர்சன்”
இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.