

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் நடந்த சம்ப்வங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஸ்பானிய வீரர் கரோனா பஸ்டாவுக்கு எதிராக நடந்த 4ம் சுற்று ஆடவர் ஒற்றையர் போட்டியின் முதல் செட்டில் தன் சர்வை தோற்ற ஜோகோவிச் பந்தை வெறுப்பில் பந்தை டென்னிஸ் ராக்கெட்டினால் பின்பக்கமாக அடிக்க அது லைன் நடுவரின் தொண்டையைத் தாக்கியது, அந்த பெண் நடுவர் நிலைகுலைந்து விழுந்தார், இதனையடுத்து கிராண்ட்ஸ்லாம் விதிகளின் படி நோவக் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஜோகோவிச் மன்னிப்புக் கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், “இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடையச் செய்ததோடு என்னை வெறுமையாக்கியுள்ளது. காயம்பட்ட அவரை நான் உடனடியாக கவனித்தேன் கடவுள் புண்ணியத்தில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார்.
அவருக்கு இதன் மூலம் ஏற்படுத்திய வேதனைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனால் பெரும்தவறிழைத்து விட்டேன். அவரது அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து அவரது பெயரை நான் வெளியிடவில்லை. தகுதி நீக்கம் குறித்து நான் மீண்டும் என் ஏமாற்றத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.
இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு வீரராகவும் இனிமேலாவது ஒரு மனிதனாகவும் மாற முயற்சிகள் மேற்கொள்வேன். யுஎஸ் ஓபனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த என்னைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி, என்னை மன்னித்து விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அண்டு 26 போட்டிகளில் வென்று ஒன்றைக் கூட தோற்காது 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொது கண நேர வெறுப்பின் செயலால் பலனை அனுபவித்து வருகிறார் ஜோகோவிச்.