சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒதுக்கப்பட்டார்: இந்த ஐபிஎல் தொடரிலும் வர்ணனைக்கு வாய்ப்பு வழங்கவில்லை

சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒதுக்கப்பட்டார்: இந்த ஐபிஎல் தொடரிலும் வர்ணனைக்கு வாய்ப்பு வழங்கவில்லை
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வர்ணனைக் குழுவில் முன்னாள் வீரர், அனுபவ வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கர் பெயர் இடம்பெறவில்லை.

கவாஸ்கர், சிவராம கிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, ரோஹன் கவாஸ்கர், ஹர்ஷா போக்ளே, அஞ்சும் சோப்ரா ஆகியோர் பெயர்கள் வர்ணனையாளர் பட்டியலில் உள்ளன. ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் பெயர் இல்லை.

சஞ்சய் மஞ்சுரேக்கர் 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் வர்ணனைக் குழுவில் இருந்து வந்தார். முதல் முறையாக தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சூப்பர்ஸ்டார்கள் ஆடும் ஐபிஎல் தொடரில் அவர்கள் ’ஆசி’ பெற்றவர்கள்தான் வர்ணனையாளர்களாக இருக்க முடியும், ஆட்டத்தை விமர்சிப்பவர்கள், வீரர்களை விமர்சனம் செய்பவர்களுக்கு அங்கு இடமில்லை, இத்தகைய போக்கை வரலாற்றாசிரியரும் கிரிக்கெட் ஆர்வலருமான ராமச்சந்திர குஹா ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளார்.

சஞ்சய் மஞ்சுரேக்கரும் உலகக்கோப்பையின் போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை துண்டு, துக்கடா வீரர் என்ற தொனியில் வர்ணித்தார், அதற்கு ஜடேஜா பதிலடி கொடுத்தார், மஞ்சுரேக்கர் மன்னிப்பு கேட்டார்.

இது தொடர்பாக சமீபத்தில் பிசிசிஐக்கும் தெளிவுபடுத்தி மன்னிப்பும் கேட்டார். தன்னை ஐபிஎல் வர்ணனையாளர் பட்டியலில் சேர்க்கும் படி கேட்டார், ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

விமர்சகனாக இருந்தால் இங்கு என்ன நடக்கும் என்பதற்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் சமீபத்திய உதாரணம்.

சச்சின் டெண்டுல்கர் தன் ஆற்றலுக்கு ஏற்ப ஆடுவதில்லை என்று ஒரு முறை வர்ணனையிலும், கட்டுரையிலும் இயன் சாப்பல் விமர்சித்தார் என்பதற்காக சச்சின் ஓய்வு பெறும் அந்த டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்ட இயன் சாப்பலிடம் பிசிசிஐ, விமர்சனம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையை விதிக்க அவர் நான் வரவேயில்லை என்று முடிவெடுத்ததும் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in