

சிஎஸ்கே அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முறை முழுதும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து தனக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்குக்கு வயது 40. அவர் கூறும்போது, “நான் சிஎஸ்கே நிர்வாகத்திடம் என் முடிவை தெரிவித்து விட்டேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். தனியுரிமைக்கான என் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்.
என் முடிவை சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தெரிவித்தேன், அவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள், அதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
சில வேளைகளில் விளையாட்டை விட குடும்பம் முக்கியமாகிவிடும், இப்போதைக்கு என் இளம் குடும்பம் மீதே என் அக்கறை. ஆனால் என் இதயம் யுஏஇ.யில் உள்ள என் அணி சிஎஸ்கேயுடன் தான் இருக்கும்.
இந்த முறையும் சிஎஸ்கே அபாரமான ஆட்டதை வெளிப்படுத்துவார்கள்” என்றார் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மலிங்கா 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், லெக் ஸ்பினர் அமித் மிஸ்ரா 157 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சென்னை பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத ஹர்பஜன் சிங்கின் நண்பர் ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்த போது, “சென்னை முகாமில் கோவிட் தொற்று காரணமாக இல்லை. குழந்தை, மனைவியை விட்டு 2 மாதங்களுக்கும் மேல் விலகியிருக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாது , இப்படிப்பட்ட நிலையில் 2 கோடி ரூபாயாவது 20 கோடி ரூபாயாவது.. பணம் பெரிதல்ல.” என்றார்