

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி, தகுதிச்சுற்றுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.
கடந்த மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சாய்னா, ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்வதில் தீவிரமாக உள்ளார். போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னா தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் புஸானன் ஆங்பும்ருங்பானை சந்திக்கிறார்.
இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் சாய்னா வெற்றி பெறும்பட்சத்தில் 2-வது சுற்றில் சகநாட்டவரான சிந்துவை சந்திக்க வாய்ப்புள்ளது. சிந்து தனது முதல் சுற்றில், ஜப்பானின் மினாட்ஸு மிடானியை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் காஷ்யப், ஜப்பானின் டகுமா யூடாவை சந்திக்கிறார். இதற்கு முன்னர் இரு முறை டகுமாவை வீழ்த்தியுள்ளார் காஷ்யப். கடைசியாக 2013 சிங்கப்பூர் ஓபனில் இருவரும் மோதியுள்ளனர். அதில் டகுமா வெற்றி பெற்றுள்ளார்.
உலகின் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் காந்த், அயர்லாந்தின் ஸ்காட் இவானு டன் மோதுகிறார். மற்றொரு இந்தியரான அஜய் ஜெயராம், டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சனை சந்திக்கிறார். இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஹாங்காங்கின் வாங் விங் வின்சென்டை எதிர்கொள்கிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்களின் முதல் சுற்றில் சீனாவின் ஸாவ் யூன்லெய்-ஸாங் கியான்ஸின் ஜோடியை சந்திக்கிறது.
மற்றொரு இந்திய ஜோடியான பிரதன்யா காட்ரே-சிக்கி ரெட்டி ஜோடி, ஜப்பானின் முதல் நிலை ஜோடியான மிசாக்கி மட்சூ டோமோ-அயாக்கா ஜோடியுடன் மோதுகிறது.