

ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்று ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி வீரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
13வது ஐபிஎல் தொடர் இம்மாதம் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக மைதானங்களில் சிறப்பான கடோனா தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மைதானத்திலும் ஹோட்டல்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிமுறைகளை பிசிசிஐ மருத்துவக் குழு வழங்கியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக யுஏஇ வந்துள்ளோம். இதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுதல் அவசியம்.
பாதுகாப்பு வளையத்தை மீறக்கூடாது. ஜாலியாக இருப்பதற்கோ, ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்கோ நாம் இங்கு வரவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பதை நம்புகிறேன்.
நமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மட்டும் பின்பற்றினால் போதும். தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. 2 மாதங்களுக்கு முன்பாக ஐபிஎல் நடக்குமா என்பது தெரியாமல் இருந்தது. இப்போது சாத்தியமாகியிருக்கிறது, எனவே இதை ஒழுங்காக நடத்திக் கொடுக்க வேண்டியது வீரர்களின் கடமையாகும்.
இவ்வாறு கூறியுள்ளார் விராட் கோலி.