உடல் ஆரோக்கியத்துடன் வாழ விளையாடுங்கள்: கோவையில் சச்சின் அறிவுரை

உடல் ஆரோக்கியத்துடன் வாழ விளையாடுங்கள்: கோவையில் சச்சின் அறிவுரை
Updated on
1 min read

உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

கோவை கொடிசியா மைதானத் தில் ஈஷா சார்பில் நடைபெற்ற கிராமோற்சவம் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:

இது போன்ற நிகழ்வுகள் பாராட்டுதலுக்கு உரியன. 7 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் போட்டியில் பங்கேற்றது சிறப்பான விஷயம். இதற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இதனை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விப் பட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. அதனால்தான் இங்கு விருப்பத் துடன் வந்தேன். சத்குருவிடம், நான் கேட்பது எல்லாம், நாம் இருவரும் இணைந்து என்னால் தத்தெடுக்கப்பட்ட நெல்லூர் புட்டம் ராஜூபத்திரிகா கிராமத்துக்கு இந்த போட்டியை ஏன் எடுத்துச் செல்லக் கூடாது? என்பதுதான்.

இங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டவர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற குழு உணர்வுடன்கூடிய செயல்பாட்டை பார்க்க முடிந்தது. குழு உணர்வுடன் கூடிய பங்களிப்புதான் எப்போதும் வெற்றி பெறும்.

என்னைப் பொறுத்தவரை விளையாட்டுதான் எனக்கு எல்லாமே. அதுதான் எனக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் எப்போதும் ஊக்கம் அளிக்கிறது. ஒழுக்கம், கூர்மையான இலக்கு, ஒருங்கிணைந்து செல்லும் பண்பு ஆகியவற்றை வளர்க்கிறது. விளையாட்டுக்கு வருவதற்கு முன்பாக நான் நிறைய விஷயங்களை சரியாக செய்யவில்லை. விளையாட்டுதான் என்னை மேம்படுத்தியது.

விளையாட்டுதான் நமக்கு குழு உணர்வை கற்றுத்தருகிறது. அது ஒருபோதும் தோல்வி அடையாது. ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தக்கூடியது. அரவணைக்கக் கூடியது. நல்ல புரிதலை ஏற்படுத்தும். இதனை வாழ்வில் பின்பற்றினால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

நீரிழிவை தவிர்க்கலாம்

இப்போது நாட்டில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. விளையாட்டுக்கு முக்கியத்தும் அளிப்பதன் மூலம் இதனை மாற்ற முடியும். ஆரோக்கியமாக வாழ ஏதாவது ஒரு விளையாட்டை தேர்வு செய்து விளையாடுங்கள். அது போதும். ‘உடல் ஆரோக்கியம்தான் சொத்து’ என எனது பாட்டி என்னிடம் சொன்னார். விளையாடுங்கள். உங்களை அது மகிழ்ச்சியாக வைக்கும். விளையாட்டுதான் என்னை எப்போதும் சிரிக்க வைக்கிறது என்றார்.

முன்னதாக, கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு சென்று அங்கு பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in