ஸ்ட்ரைக் ரேட் என்பார்கள், சராசரி என்பார்கள், நான் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது நீக்கப்பட்டேன்: ரஹானே ஆதங்கம்

ஸ்ட்ரைக் ரேட் என்பார்கள், சராசரி என்பார்கள், நான் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது நீக்கப்பட்டேன்: ரஹானே ஆதங்கம்
Updated on
1 min read

இந்திய அணி பேட்டிங் வரிசையின் ஓட்டையான 4ம் நிலையில் 2019 உலகக்கோப்பையின் போதுதான் இறங்கியிருக்க வேண்டும் என்று அஜிங்கிய ரஹானே ஆதங்கப்பட்டுள்ளார்.

விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் நிறைய வீரர்களை அந்த இடத்துக்குப் பரிசோதித்தனர், இன்னமும் பரிசோதித்துக் கொண்டு தீர்வு காணப்படமால் இருக்கும் 4ம் நிலையில் உண்மையில் ரஹானே பொருத்தமானவர்தான். 2017-18-ல் கடைசியாக இந்திய ஒருநாள் அணியில் ரஹானே ஆடினார்.

ஆனால் ரஹானே பேட்டிங் அணுகுமுறையிலும் பிரச்சினை இருந்தது, பந்து பழசாகி களவியூகம் தள்ளி அமைக்கப்பட்டால் அவரால் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை என்பதுதான் அது. எனவே 4ம் நிலையில் கேப்டன் கோலி, கோச் ரவிசாஸ்திரியின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ரஹானேவுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.

இந்நிலையில் ரஹானே கூறியதாவது:

உலகக்கோப்பை 2019 அணியில் நான் 4ம் நிலையில் ஆடுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது போயே போச்சு. அது பற்றி இனி பேசிப்பயனில்லை. இந்திய ஒருநாள் அணிக்குள் நுழைய பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். வெள்ளைப்பந்தில் இன்னும் என்னால் நன்றாக ஆட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நான் கவுண்ட்டி கிரிக்கெட் ஆடினேன், உலகக்கோப்பை அப்போது நடந்து கொண்டிருந்தது, ஒரு வீரராக எவருக்குமே உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்யும். குறிப்பாக நாம் நன்றாக ஆடியிருக்கிறோம், கடந்த கால ரன்களும் நமக்குச் சாதகமாக இருக்கும் போது உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்யும்.

இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்படுவதே. ஒருநாள் சர்வதேச போட்டி இந்திய அணியில் மீண்டும் நுழைவேன், எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.

நான் நன்றாகவே ஆடிக்கொண்டிருக்கும் போதுதான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். பலரும் ஸ்ட்ரைக் ரேட், சராசரி என்று பேசுவார்கள் ஆனால் என்னை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்னதான 2 ஆண்டுகளில் நான் நன்றாகத்தான் ஆடியிருக்கிறேன். 50 ஓவர் கிரிக்கெட்டில் என் ரெக்கார்ட் உண்மையில் நன்றாகத்தான் இருந்தது.

நான் பாசிட்டிவ் ஆனவன், எனக்கு என் மேல் நம்பிக்கை உள்ளது. அடுத்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை விட என் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கியம். நிச்சயம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்புவேன்.

இவ்வாறு கூறினார் அஜிங்கிய ரஹானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in