Last Updated : 25 Aug, 2020 12:52 PM

 

Published : 25 Aug 2020 12:52 PM
Last Updated : 25 Aug 2020 12:52 PM

ஐபிஎல்2020: டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நியமனம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதிதொடங்க உள்ள ஐபிஎல் டி20 தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த ஆஸியின் ஜேம்ஸ் ஹோப்ஸ் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வர முடியாததால், ரியான் ஹாரிஸை நியமித்து டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

சர்வதே கிரிக்கெட் உலகில் மிகவும் தாமதமாக நுழைந்த ஹாரிஸ், 27 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும், 21 ஒருநாள் போட்டியில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த 2009 முதல் 2015-ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பந்துவீச்சாளராக ஹாரிஸ் வலம் வந்தார்.

ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஹாரிஸ் 37 ஆட்டங்களில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக ஹாரிஸ் விளையாடினார். கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹாரிஸ் ஓய்வு அறிவித்தார்.

பயிற்சியாளராகவும் இருந்த அனுபவம் ஹாரிஸுக்கு இருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், பிக் பாஷ் டி20 லீக்கில், பிரிஸ்பேன் ஹீட், ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணிக்கும் பயிற்சியாளராக ஹாரிஸ் பணியாற்றியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஹாரிஸ் கூறுகையில், “ மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சார்ந்திருக்கும் அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்ய மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அனைவருடனும் சேர்ந்து பணியாற்ற இன்னும் நான் காத்திருக்கமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங்குடனும், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சாமுவேல் பத்ரி, பேட்டிங் பயிற்சியாளராக முகமது ஃகைபுடனும், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஹாரிஸ் இணைய உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x