Last Updated : 25 Aug, 2020 09:49 AM

 

Published : 25 Aug 2020 09:49 AM
Last Updated : 25 Aug 2020 09:49 AM

8 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற உசேன் போல்ட் தனிமைப்படுத்திக் கொண்டார்; கரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பு

உசேன் போல்ட்: கோப்புப் படம்.

கிங்ஸ்டன்

8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதால், அந்த முடிவு வரும் வரை முன்னெச்சரிக்கையாகத் தனிமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு தடகளத்தில் உலக அளவில் அசைக்க முடியாத மன்னராகத் திகழ்ந்தவர் ஜமைக்கா வீரர் உசேன். 8 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ள உசேன் போல்ட், 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கம் வென்ற உலகின் ஒரே வீரர் போல்ட் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 100 மீ, 200 மீ, 400 மீ தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியன் பட்டத்தை உசேன் போல்ட் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி உசேன் போல்டின் 34-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, உசேன் போல்ட் குடும்பத்தினர், நண்பர்கள் மான்செஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், பேயர் லெவர்குஷன் விங்கர் லியான் பெய்லி, கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், தடகள வீரர் உசேன் போல்ட்டுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து, உசேன் போல்ட் தனது ட்விட்டரில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் கூறுகிறார்கள். அதற்காகவே நான் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அந்த முடிவுக்காகக் காத்திருக்கிறேன். அதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கரோனா பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி நான் தனிமையில் இருக்கிறேன். நான் முடிவு அறிவிக்கும் வரை என்னுடைய நண்பர்களும் இதேபோல் தனிமையில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x