Last Updated : 24 Aug, 2020 01:01 PM

 

Published : 24 Aug 2020 01:01 PM
Last Updated : 24 Aug 2020 01:01 PM

600-வது விக்கெட்டுக்காக காத்திருக்கும் ஆன்டர்ஸன்: 273 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து 

5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்டர்ஸன்: படம் உதவி | ட்விட்டர்.

சவுத்தாம்டன்


ஆன்டர்ஸனின் துல்லியமான பந்துவீச்சால் சவுத்தாம்டனில் நடந்து வரும் 3-வது மற்றும்கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது.

துல்லியப் பந்துவீச்சாலும், ஸ்விங் பந்துவீச்சாலும் மிரட்டிய ஆன்டர்ஸன் 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் சரிவுக்குக் காரணாக அமைந்தார். 600 விக்கெட் மைல்கல்லை எட்ட ஆன்டர்ஸனுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

தோல்வியின் பிடியில் இருக்கும் பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸில் 310 ரன்கள் சேர்த்து அதன்பின் லீடிங் ரன் சேர்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். இன்னும் இரு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது. ஆதலால், இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி நகர்ந்துள்ளது.

பாகிஸ்தான் கேப்டன் அசால் அலி மட்டுமே நிலைத்து ஆடி 141 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக குறிப்பிடத்தகுந்த அளவில் ரிஸ்வான் 53 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து அணியைவிட, முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால், மழை மற்றும் வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், 598 விக்கெட்டுகளுடன் புதிய சாதனைக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் இன்று மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் 3 வீரர்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். இலங்கை முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708), அனில் கும்ப்ளே (519) ஆகிய மூவர்தான் அந்த சாதனையைச் செய்துள்ளனர். ஆன்டர்ஸன் 600 விக்கெட்டுகளை எட்டினால் 4-வது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

சதம் அடித்தமகிழ்ச்சியில் அசார் அலி

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கிராலி 267 ரன்கள் சேர்த்தது ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் அசார் அலி 10 ரன்களுடன் இருந்தார்.

3-வது நாளான நேற்று அசார் அலி, ஆசாத் ஷாபிக் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆன்டர்ஸன் பந்துவீச்சில் 5 ரன்னில் ஷாபிக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவாத் ஆலம் 21 ரன்னில் பெஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. 6-வது விக்கெட்டுக்கு ரிஸ்வான், அசார் அலி கூட்டணி மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். இருவரும் சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

நிதானமாக ஆடிய அசார் அலி 205 பந்துகளில் சதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களையும் கடந்தார். துணையாக ஆடிய ரிஸ்வான் அரை சதம் அடித்து 53 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின் பின்வரிசையில் களமிறங்கிய யாஷிர் ஷா (20), ஷாகின் அப்ரிதி (5), முகமது அப்பாஸ் (1), நஷீம் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸ் 93 ஓவர்களில் 273 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை பாகிஸ்தான் பாலோ-ஆன் பெற்று ஆடும் என எதிர்பார்க்கப்பட்டபோது, போதுமான வெளிச்சம் இல்லாதது, மழை ஆகியவற்றால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்ஸன் 29-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x