Published : 03 Sep 2015 09:49 AM
Last Updated : 03 Sep 2015 09:49 AM

ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸ்திரேலியா

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி கள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சவுதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது இங்கிலாந்து. டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால், ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஆஸ்திரேலியா. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கலாம். ஒரு டி-20 போட்டியிலும் தோற்றிருக்கலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தரவரிசையில் அவர்கள்தான் நம்பர் 1. இங்கிலாந்தோ 6-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளவர்களில் 8 பேர் உலகக் கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள்.

கடைசியாக இரு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறது ஆஸ்திரேலியா. இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளின் அடிப்படையில் பார்த்தாலும் புள்ளிவிவரம் ஆஸ்திரேலியாவுக்கே சாதகம்.

கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், மிட்ஷெல் மார்ஷ் என அதிரடியான ஆல்ரவுண்டர்களால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் நிரம்பியுள்ளது. வார்னர், ஸ்மித், பெய்லி, ஜோ பர்ன்ஸ் ஆகிய நான்கு பேர் மட்டுமே முழுநேர பேட்ஸ்மேன்கள். இந்த அணிச்சேர்க்கையே இத்தொடர் முழுவதும் இருக்கும் என நம்பலாம்.

அஸ்டோன் அகருக்கு வாய்ப் பளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அணி விவரம்:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், மிட்ஷெல் மார்ஷ், மேத்யூ வாட், கோல்டர் நீல், மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ், அஸ்டோன் அகர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேம்ஸ் பட்டின்சன்.

வலுவான இங்கிலாந்து

கடந்த 31-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியை இங்கிலாந்து வென்றுள்ளது. கடந்த ஜூனில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியிருப்பது அந்த அணிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். மோர்கன், பெய்ர்ஸ்டோ ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஸ்டோக்ஸ், ஃபின், டேவிட் வில்லி ஆகியோர் அசத்தலாக பந்து வீசி வருகின்றனர்.

நியூஸிலாந்து தொடரை வென்ற அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஜோ ரூட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மொயீன் அலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 3-வது விக்கெட்டுக்கு ரூட்டுக்கு பதிலாக அலி களமிறங்குவார். ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்கள்.

மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷீத் என இங்கிலாந்திலும் ஆல்ரவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அணி விவரம்:

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

“இங்கிலாந்தின் அதிரடி பாணிதான் எங்களின் பந்து வீச்சாளர்களுக்கான ஆயுதம். நியூஸிலாந்துக்கு எதிராக அவர்கள் நன்றாகவே விளை யாடினர். ஆனால், அப்படி அடித்து ஆட முற்படும்போது நாங்கள் விரைவாக சில விக்கெட்டுகளைக் கைப்பற்றி விடுவோம்” என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஸ்மித்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர். வழக்கமான ஆட்டத்திலிருந்து மாறி, கட்டற்ற அதிரடி என்ற முறைக்கு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆதரவு தெரிவிக்கிறார். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இதே உத்தியை அவர் பின்பற்றுவார். வாட்சன் தற்போது சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அவர் இத்தொடரை மாற்றியமைப்பார் என மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x