

இளம் இந்திய அணி இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றிருப்பது தன்னளவில் ஒரு மைல்கல்லே என்று கேப்டன் விராட் கோலி பெருமிதம் அடைந்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, “22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு டெஸ்ட் தொடரை வெற்றி பெறுவது சாதனைதான். 0-1 என்று பின் தங்கிய பிறகு இங்கு இதற்கு முன் வந்த எந்த இந்திய அணியும் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். ஆகவே நாங்கள் வரலாறு படைத்துள்ளோம் என்றே கருதுகிறேன்.
இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத புவனேஷ் குமார், வருண் ஆரோன், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தனர். இது ஒரு கூட்டு முயற்சி. இந்த வெற்றிதான் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் கட்டமைப்பதற்கான அடித்தளம்.
காயங்கள் எப்பவுமே அணிக்கு பெரிய வெறுப்பைத் தரக்கூடியவைதான். ஆனால் அணுகுமுறை அபாரமாக இருந்தது. விஜய் காயமடைந்த காரணத்தினால் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை புஜாரா ஒரு வாய்ப்பாக கருதினார், கடினமானதாகக் கருதவில்லை. இந்த அணுகுமுறையினால்தான் நாங்கள் இவ்வாறு விளையாட முடிந்தது.
வெற்றி பெற்றாலும், இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் தேவை. எவ்வளவு மணி நேர ஆட்டத்தில் நாங்கள் மோசமாக இருந்தோம் என்பதை எண்ணிவிடலாம், ஆனால் வெற்றி பெற்றுத் தந்த வீரர்கள் குறித்து பெருமை அடைகிறேன்”
இவ்வாறு கூறினார் விராட் கோலி.