

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள 13-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் அந்நாட்டுக்கு புதுடெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம்தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐபிஎல் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே 8 அணிகளும் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர். அதன்பின் பயோ-செக்யூர் வளையத்துக்குள் வந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இன்று கரோனா பாதுகாப்பு படையுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டனர். விமானநிலையத்துக்குச் செல்லும் வரை அனைத்து வீரர்களும் பிபிஇ ஆடை அணிந்தே சென்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய வெளிநாட்டு வீரர்களான அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பாட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சில போட்டிகளில் விளையாடமாட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டுதான் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளனர்.
ஐபிஎல் தொடங்கியபோது, ஷேர்வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது அதன்பின் ஒருமுறை கூட பைனலுக்கு வரவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை இரு முக்கிய வீரர்களான அஸ்வின், ரஹானே ஆகியோரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வழங்கிவிட்டு, இளம் வீரர்கள் யாஹஸ்வி ஜெய்ஸ்வால், கார்த்தி தியாகி ஆகியோரை விலைக்கு வாங்கியுள்ளது, மேலும், டாம் கரண், டேவிட் மில்லரும் அணிக்கு வந்துள்ளனர்.
மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினரும் புதுடெல்லியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று புறப்பட்டனர். அந்த அணி வீரர் முகமது ஷமி விமானனத்தில் இருந்தபடியே வீரர்கள் பயணம் குறித்த படங்களை ட்விட்டரில் பதிவிட்டார்.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 21-ம் தேதி(நாளை) ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுகின்றனர். கடந்த 5 நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிறச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் இருவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், நாளையில்அணியில் இணைந்துவிடுகின்றனர். நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுகின்றனர்.
நாளை புறப்படும் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் அவர் இருவாரங்களுக்குப்பின் அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது.