அட! ஒரு ஷாட்டில் முடிப்பா... என்ற சேவாக், சிக்ஸ் அடித்து நான் முடிக்கிறேன் என்ற தோனி: வேணுகோபால் ராவ் ருசிகரப் பகிர்வு 

அட! ஒரு ஷாட்டில் முடிப்பா... என்ற சேவாக், சிக்ஸ் அடித்து நான் முடிக்கிறேன் என்ற தோனி: வேணுகோபால் ராவ் ருசிகரப் பகிர்வு 
Updated on
1 min read

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். தோனியின் ஒருநாள் போட்டி அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் இலங்கைக்கு எதிராக எடுத்த 183 நாட் அவுட்.

3ம் நிலையில் இறங்கிய தோனி 145 பந்துகளில் 210 நிமிடங்களில் 15 பவுண்டரிகள் 10 அரக்க சிக்சர்களுடன் இலங்கையின் 300 ரன்கள் இலக்கை ஊதினார். ஸ்ட்ரைக் ரேட் 126.20.

தோனியின் இந்த அசாத்திய இன்னிங்ஸை தோனி முடிக்கும் போது ரன்னர் முனையில் இருந்த வேணுகோபால் ராவ் ஸ்போர்ட்ஸ்டார் இதழில் இது தொடர்பாகக் கூறியதாவது:

அது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் தோனியின் இந்த இன்னிங்ஸ் சான்ஸ்லெஸ் இன்னிங்ஸ். சமிந்தா வாஸ் பந்தை கவருக்கு மேல் தூக்கி அடித்தார். நான் 6ம் நிலையில் இறங்கிய போது நான் வெற்றி ஷாட்டை அடித்து முடிப்பேன் என்று நம்பினேன்.

ஆனால் தோனி தான் முடிக்க விரும்புவதாகவும் சிக்சர் அடித்து முடிப்பதாகவும் கூறினார். 2 பவுண்டரிகளை அடித்தார், பிறகு என்னிடம் வந்து சிக்ஸ் அடித்து நானே முடிக்கிறேன் என்றார். எனக்கு வாய்ப்பு கொடு சிக்சருடன் முடிக்கிறேன் என்றார். அவ்வளவு பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு அவர் சிக்ஸ் அடித்து முடிப்பார் என்பது எனக்கும் தெரியும்.

அந்த இன்னிங்ஸின் போது தோனிக்கு இன்னிங்ஸின் பின் நிலையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது, அதனால் விரேந்திர சேவாக் அவருக்கு பை-ரன்னராக இருந்தார்.

நான் தில்ஹாரோ பெர்னாண்டோ பந்துகளை எதிர்கொண்டேன். அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக் கொண்டிருந்தார் நான் பந்தை ஆடாமல் விட்டுக் கொண்டிருந்தேன். சேவாக் பை ரன்னராக இருந்தவர் என்னிடம் தொடர்ந்து அட! அடித்து முடிப்பா... கடைசி வரையெல்லாம் காத்திருக்காதே என்று அடிக்கடி கூறினார்.

ரசிகர்களும் ஆட்டத்தை முடிக்கவே விரும்பினர். ஆனால் தோனியோ ‘இல்லை, பொறுத்திரு, நான் முடிக்கிறேன். அடுத்த ஓவரில் முடிக்கிறேன் என்றார். அடுத்த ஓவர் தொடங்கியவுடன் சிக்ஸ் அடித்து தோனியே முடித்தார். நான் 19 நாட் அவுட்.

தோனியிடம் ஒரு விஷயம் என்னவெனில் 3ம் நிலையில் இறங்குகிறாயா என்றால் ஓகே என்பார், இல்லை 8ம் நிலையில் இறங்க வேண்டுமென்றாலும் கவலைப்பட மாட்டார். அவரைப் போன்ற ஒரு வீரர் நமக்கு கிடைப்பது அரிதுதான்.

இவ்வாறு கூறினார் வேணுகோபால் ராவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in