

எனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை என்னை சிந்திக்கும் திறன் கொண்ட வீராங்கனையாகவும், அமைதியானவராகவும் மாற்றியுள்ளது என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சரிதா தேவி, அரையிறுதியில் தென் கொரியாவின் ஜினா பார்க்கை எதிர்கொண்டார். அதில் சரிதா தேவி சிறப்பாக செயல்பட்டபோதிலும், அவர் தோல்வியடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து கோபமடைந்த சரிதா தேவி, பதக்க மேடையில் நின்றபோது வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்தததோடு, கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் சரிதா தேவி தனது செயலுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களிடமும், அகில இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பிடமும் மன்னிப்பு கோரியபோதும், அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் சரிதா தேவி மேலும் கூறியதாவது:
இப்போது மேலும் சிறந்த வீராங்கனையாக மாறியிருப்பதாக நினைக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எனது ஆட்டத்தில் இன்னும் நிறைய விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளதாக நினைக்கிறேன். கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்த முடியாது. ஓராண்டு தடைக்காலத்துக்குப் பிறகு நான் மிகவும் அமைதியானவராகவும், சிந்திக்கும் திறனுள்ள வீராங்கனையாகவும் மாறியிருக்கிறேன். மொத்தத்தில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் முன்பைவிட இப்போது வலுப்பெற்றிருக்கிறேன்.
முன்பைவிட இப்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன. அதை நிறைவேற்ற வேண்டியுள்ளது. தற்போது முன்னாள் ஒலிம்பியனும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவருமான டிங்கோ சிங்கிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் இலக்கு. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டி, நான் மீண்டும் களம்புகும் போட்டியாகும். அந்த போட்டிக்கு முன்னதாக லிவர்பூல் சென்று பயிற்சி பெறவிருக்கிறேன் என்றார்.
குத்துச்சண்டையில் பங்கேற்க தடை செய்யப்பட்ட ஓர் ஆண்டு காலம் குறித்துப் பேசிய சரிதா, “கடந்த ஓர் ஆண்டு காலமும் அமைதியான ஆண்டாக அமைந்தது. நல்ல ஓய்வெடுத்தேன். எனது வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதே காயத்தோடுதான் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டேன். மொத்தத்தில் நான் நேற்று தடை பெற்றது போன்று உள்ளது. காலம் வேகமாக ஓடிவிட்டது” என்றார்.
ஓர் ஆண்டு காலம் போட்டியில் பங்கேற்காமல் இருந்தாலும் மனஉறுதியை இழக்கவில்லை எனக்கூறிய சரிதா, “எல்லா இடங்களிலும் எனக்கு ஆதரவு கிடைத்தது. எனது குடும்பத்தினர் மட்டுமின்றி, மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி, எனது ஸ்பான்சரான ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட், சச்சின் டெண்டுல்கர், சகவீரர், வீராங்கனைகள் என அனைவரும் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் கடினமான தருணத்தில் அதை எதிர்கொள்வதற்கு எனக்கு வலு கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
எனது குடும்பத்தினரின் உதவியின்றி நான் இங்கு நின்றிருக்க முடியாது. அவர்களின் ஆதரவு இல்லையெனில் நான் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்குவதற்கான ஊக்கம் கிடைத்திருக்காது. நான் ஏற்ற, இறக்கங்களை விரும்புபவள்தான். குத்துச்சண்டைக்காகவே பிறந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஓர் ஆண்டு காலம் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போனது மிகவும் கடினமான விஷயம் ஆகும்” என்றார்.