

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஜோஸ் பட்லரை ரன்னர் முனையில் பவுலிங் போடுவதற்கு முன்பாகவே ‘மன்கடிங்’ முறையில் ரன் அவுட் செய்து அஸ்வின் சர்ச்சையில் சிக்கினார்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அத்தகைய அவுட்டை அவர் நியாயப்படுத்தியும் பேசி வருகிறார். எச்சரிக்கைக் கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் பேட்ஸ்மேன் ரன்னர் முனையில் சில அடிகள் முன்னால் சென்று குவிக் சிங்கிள், இரண்டு என்று ஒடுவதை தடுக்கலாம், எடுத்த எடுப்பிலேயே மன்கடிங் செய்வது விதிப்படி சரியாக இருந்தாலும் தார்மீக அடிப்படையற்றது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 2020 ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடுகிறார் அஸ்வின், அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
நிச்சயம் இது குறித்து அஸ்வினிடம் விவாதிப்பேன். முதலில் இதைத்தான் நான் செய்யப்போகிறேன். கடந்த ஆண்டு அவர் எங்கள் அனியில் இல்லை. இந்த ஆண்டு அவரை இந்த அணிக்கு கொண்டு வர முடிவெடுத்தோம். அவர் பிரமாதமான பவுலர், ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பிரமாதமாக வீசி வருகிறார்.
கடந்த முறை அவர் மன்கடின் செய்த விவகாரத்தின் போதே எங்கள் அணி வீரர்களிடம் பேசினேன், அப்போது அவர் செய்து விட்டார், இது தொடர்கதையாகி விடும், அப்படி நடக்கக் கூடாது. ஆனால் நாம் இந்த வழியில் நம் கிரிக்கெட்டை ஆடப்போவதில்லை என்று அணி வீரர்களிடம் தெளிவாக விளக்கினேன்.
ஆகவே இந்த முறை அஸ்வினிடமும் பேசப்போகிறேன், அது கடினமான ஒரு விவாதமாகத்தான் இருக்கும். அவர் அந்த மாதிரி அவுட் செய்வது விதிகளுக்கு உட்பட்டது என்ற கருத்தை வைத்திருக்கலாம். ஆனால் ஆட்ட உணர்வுக்கு எதிரானது. குறைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.
இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.