

ரசிகர்கள் முன்னிலையில் மைதானத்தில் ஒரு போட்டியில் ஆடி ஓய்வு பெறுவதுதான் லெஜண்ட்களின் வாழ்க்கையில் முக்கியமான தருணம், ஆனால் அதையெல்லாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்கும் ‘என்வழி தனிவழி’ எனும் நபர் தோனி.
இதிலும் தோனியை தனித்துவமானவர் என்று கூற முடியாது, திராவிட், லஷ்மண் என்ற இரு பெரும் வீரர்களும் பிரியாவிடை போட்டி இல்லாமல்தான் ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், தோனி வீட்டிலமர்ந்தபடியே ஓய்வு அறிவிப்பது சரியல்ல என்றும் ஷோயப் அக்தர், இவ்வளவு ரசிகர்கள் இருக்கும் தோனி சர்வதேச போட்டி ஒன்றில் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதெல்லாம் இல்லை தோனி ஓய்வு அறிவித்ததில் கரோனா பரவலும் ஒரு பங்கு வகிததாக யஜுவேந்திர சாஹல் ஒரு ‘ரியலிஸ்டிக்’ ஆன சாத்தியத்தை முன் வைத்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர், தோனிக்கு பிரியாவிட ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். யாரும் அவர் ஓய்வு பெறுவார் என்று எண்ணாத நேரத்தில் அவர் ஓய்வை அறிவித்து விட்டார். இப்போது சர்வதேச ஆட்டம் இந்திய அணிக்கு இல்லை.
ஐபிஎல் போட்டியின் போது அவரிடம் இது பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும். அணிக்காக, நாட்டுக்காக ஏகப்பட்ட பங்களிப்பு செய்துள்ளார். அதற்குரிய மரியாதை அளிக்கப்படும். அவர் ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ முறைப்படி ஒரு பாராட்டு பிரியாவிட நிகழ்ச்சி நடத்தப்படும். அவருக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.