

ஐக்கியஅரபு அமீரகத்தில் நடக்கும் 13-வதுஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியி வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ் வோக்ஸ் ஏன் இடம் பெறவில்லை என்ற காரணம் கூறப்படவில்லை என்றபோதிலும், உடல்நலப் பிரச்சினையால் அவர் விளையாடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அன்ரிச் நார்ட்ஜே இடம் பெற்றிருந்தார். ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நார்ட்ஜே, தோள்பட்டை காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நார்ட்ஜே வந்துள்ளது அந்த அணியின் வேகப்பந்துவீச்சுப் படையின் வலிமையை அதிகப்படுத்தும்.
ஏற்கெனவே டெல்லி அணியில் காகிசோ ரபாடா, இசாந்த் சர்மா, கீமோ பால், மோகித் சர்மா ஆகியோர் ஏற்கெனவே இருக்கும் நிலையில் நார்ட்ஜே இணைந்திருப்பது பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும்.
கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய நார்ட்ஜே இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், 7 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்திருப்பது குறித்து நார்ட்ஜே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கருத்தில் “ டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்திருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு விளையாட முடியவில்லை. இளம் வீரர்கள், அனுபவமிக்க வீரர்கள் கலப்புடன் இருக்கும் டெல்லி அணியில் இணைவது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.
நான் மிகப்பெரிய அனுபவத்தை கற்றுக்கொள்ளும் தொடராக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகத்துக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்
இவ்வாறு நார்ட்ஜே தெரிவித்துள்ளார்.