Last Updated : 19 Aug, 2020 01:01 PM

 

Published : 19 Aug 2020 01:01 PM
Last Updated : 19 Aug 2020 01:01 PM

கரீபியன் பிரீமியர் லீக் 2020:  தொடக்க நாளில் சுனில் நரைன், ரஷீத் கான் ஆல்ரவுண்ட் அசத்தல்

மேற்கிந்திய தீவுகளில் நேற்று தொடங்கிய கரீபியன் லீக் டி20 தொடரில் சுனில் நரைன் மற்றும் ஆப்கானின் ரஷீத் கான் ஆகியோரது ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் அவர்கள் ஆடிய இரு அணிகளும் வென்றன.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் 11 ஆட்ட தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ். மற்றொரு போட்டியில் பிரையன் லாரா அகாடமியில் பார்பேடோஸ் ட்ரைடெண்ட்ஸ் அணி 6 ரன்களில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட் அணியை வீழ்த்தியது.

தொடக்க மேட்சில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் 28 பந்துகளில் 50 ரன்கள் வெளுத்து வாங்கினார். இதோடு 4 ஓவர்களில் 19 ரன்களையே கொடுத்து சிக்கனம் காட்டி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்ரவுண்ட் திறமையில் அசத்தினார். ஆனாலும் ட்ரிபாங்கோ கடைசியில் டேரன் பிராவோ (30) டிவைன் பிராவோ (6) என்று ட்ரிபாங்கோவை ஜெயிக்க வைத்தனர்.

கயானா வாரியர்ஸ் அணியில் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மையர் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 17 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது. ட்ரிபாங்கோ கேப்டன் கெய்ரன்பொலார்ட் முதலில் பவுலிங் செய்ய எடுத்த முடிவு கைகொடுத்தது. கடந்த ஆண்டு சிபிஎல் தொடரின் டாப் ஸ்கோரர் பிராண்டன் கிங்கை அலி கான் வெளியேற்றினார். இவர் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ட்ரிபாங்கோ அணியின் ஸ்பின்னர்கள் டைட் ஆக்க 7வது ஓவரில்தான் ராஸ் டெய்லர் (33) முதல் சிக்சரை அடித்தார். டெய்லரும் ஹெட்மையரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்க்க, சுனில் நரைன் கூட்டணியை உடைத்தார், டெய்லரை வெளியேற்றினார். ஹெட்மையரும், நிகோலஸ் பூரனும் நரைனை சீண்டாமல் சாதுரியமாக ஆடி ஓவரை முடித்து வைத்தனர்.

5 ஒவர்கள் மீதமிருக்கும் போது கயானா வாரியர்ஸ் அணியின் ஸ்கோர் 89/3. ஆனால் கடைசி 5 ஒவர்களில் பந்தை நாலாதிசையிலும் பறக்க விட்டதில் 13வது ஓவரில் 16 ரன்கள், 14வது ஓவரில் 12, 17வது ஓவரில் 15 என்று விளாச ஸ்கோர் 17 ஓவர்களில் 145 ஆனது.

146 ரன்கள் வெற்றி இலக்குடன் ட்ரிபாங்கோ ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் கயானா வாரியர்ஸ் அணி ட்ரிபாங்கோவின் அதிரடி தொடக்க வீரர்களான நரைன் மற்றும் லெண்டில் சிம்மன்ஸை 3 ஓவர்களுக்கு கட்டிப்போட்டு 9 ரன்களையே எடுக்க முடிந்தது.

7வது ஓவரில் நியூஸி.யின் அதிரடி வீரர் கொலின் மன்ரோ (17) ஒரு சிக்ஸ், ஒரு நான்கை அடித்தார். ஆனால் பிராண்டன் கிங்கின் அபாரமான டைவிங் கேட்சுக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் பந்தில் வெளியேறினார் மன்ரோ.

கயானா வாரியர்ஸின் சுனில் நரைன் மீதான செக் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை, நரைன் காட்டடி தர்பாரில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 9வது ஓவரில் 17 ரன்கள் வந்தன. 10வது ஓவரில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார் நரைன். இதனையடுத்து நைட் ரைடர்ஸ் 81/2 என்று 8 ஓவர்களில் வெற்றிக்கு 64 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. சுனில் நரைன் 27 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ட்ரிபாங்கோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கயானாவின் 11 மேட்ச் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மற்றொரு சிபிஎல் போட்டியில் பார்பேடோஸ் ட்ரைடெண்ட்ஸ் அணியின் மைக்கேல் சாண்ட்னர் 20 ரன்களை அடித்தும் 2 விக்கெட்டுகளை 18 ரன்களுக்கும் கைப்பற்ற, ரஷீத் கான் 26 ரன்களையும் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற செயிண்ட் கிட்ஸ் அணியை வீழ்த்தியது.

பார்பேடோஸ் அணி 8/3 என்று தடுமாறிய போது கேப்டன் ஜேசன் ஹோல்டர் 38 ரன்களையும் கைலி மேயர்ஸ் 37 ரன்களையும் விளாச 61 ரன்களை சேர்த்தனர், ஆனால் விறுவிறுவென அடுத்த 3 விக்கெட்டுகளை இழக்க 69/6 என்று ஆனது. அப்போதுதான் ஆல்ரவுண்டர்கள் சாண்ட்னர், ரஷீத் கான் இனைண்து குறு அதிரடியை ஆடினர். ஸ்கோர் சற்றும் எதிர்பாராமல் 150 ரன்களைக் கடந்து 153 ஆக முடிந்தது. செயிண்ட் கிட்ஸ் அணி 6 ரன்கள் குறைவாக முடிந்து தோல்வி தழுவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x