

ஓய்வு பெறுவதற்கான எம்.எஸ்.தோனியின் முடிவை அவரது சொந்த விருப்பம் ஆகவே அதை மதிக்க வேண்டும் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், 2021 டி20 உலகக்கோப்பையில் ஆடிவிட்டு அவர் ஓய்வு பெற்றிருக்கலாம் என்றார்.
‘போல்வாசிம்’ என்ற யூ டியூப் சேனலில் அக்தர் கூறியதாவது:
தோனி டி20 உலகக்கோப்பையில் ஆடிவிட்டு ஓய்வு பெற்றிருக்கலாம். இந்தியர்கள் தங்கள் நட்சத்திரங்களை கொண்டாடும் விதம், அவர்கள் மீது கொண்டுள்ள நேயம், அவர்களுக்குக் கொடுக்கும் அங்கீகாரம் எல்லாம் சேர்ந்து தோனியை டி20 உலகக்கோப்பையில் ஆட வைத்திருக்க வேண்டும். எனினும் அது அவரது சொந்த விருப்பமே.
அவர் அனைத்தையும் வென்றுள்ளார், ராஞ்சியிலிருந்து வந்து இந்தியாவையே உலுக்கினார், இதை விட என்ன வேண்டும்? இந்தியா போன்ற ஒரு நாடு அவரை ஒருபோதும் மறக்காது.
பிரதமர் மோடி அவரை அழைத்து டி20 உலகக்கோப்பையில் ஆடுமாறு கேட்கலாம். அதுவும் சாத்தியம்தான். இம்ரான் கானை 1987ம் ஆண்டு ஜெனரல் ஜியா உல் ஹக் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இம்ரான் ஆடினார். பிரதமர் கேட்டால் யாரும் மறுக்க முடியாது.
அப்படி தோனி ஆடினால் அவருக்கு பிரியாவிடை அளிக்க இந்தியாவே தயாராகும். ஒன்றிரண்டு டி20 போட்டிகளில் அவர் ஆடினால் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் நிறைந்து விடும்.
இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.