Published : 18 Aug 2020 08:38 AM
Last Updated : 18 Aug 2020 08:38 AM

ஆக.15 சுதந்திர தினத்தில் ஓய்வு அறிவிப்பதை நானும் தோனியும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம்: ரெய்னா மனம் திறப்பு

ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று ஓய்வு செய்தியை அறிவிப்பது என்று தோனியும் தானும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இருவரும் இவ்வாறு அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அதுவும் சுரேஷ் ரெய்னா தன் 33 வயதில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது அவரது ரசிகர்களை சற்றே வேதனையில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 73வது சுதந்திர தினம், எங்கள் இருவரின் ஜெர்சி எண்ணும் 7,3. இரண்டையும் சேர்த்து எழுதினால் 73. எனவே இந்த நாளில் ஓய்வு பெறுவதை சென்னையில் அறிவிப்பது என்று ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இதை விட சிறந்த நாள் வேறு அமையப்போவதில்லை. இதன்பின் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அதிக நேரம் அழுதோம்.

பிறகு பியூஷ் சாவ்லா, அம்பாதி ராயுடு, கெதார் ஜாதவ், கரன் சர்மா மற்றும் நான் உட்பட உட்கார்ந்து எங்களது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் நட்பு குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது.

தோனி 2004-ல் வங்கதேசத்துக்கு எதிராக தன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார், நான் 2005-ல் இலங்கைக்கு எதிராக தொடங்கினேன். ஏறக்குறைய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டை ஒன்றாகவே தொடங்கினோம். இப்போது சென்னையில் தொடர்ந்து ஆடுகிறோம். இருவரும் ஒன்றாக இணைந்து ஓய்வு பெற்றுள்ளோம், இருவரும் இணைந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவோம், என்றார் சுரேஷ் ரெய்னா.

தோனியும் ரெய்னாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் கூட்டணி அமைத்து 73 போட்டிகளில் 3,585 ரன்களை எடுத்துள்ளனர். சராசரி 56.90.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x