Last Updated : 17 Aug, 2020 11:35 AM

 

Published : 17 Aug 2020 11:35 AM
Last Updated : 17 Aug 2020 11:35 AM

முதலில் ஓய்வு குறித்த முடிவை வெளி உலகிற்கு அறிவித்தார், பிறகுதான் எங்களுக்கு  தெரிவித்தார்: ரெய்னா குறித்து பிசிசிஐ


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை வெளிப்படையாக அறிவித்த மறுநாள்தான், சுரேஷ் ரெய்னா தனது அதிகாரபூர்வமான ஓய்வு கடிதத்தை எங்களுக்கு அனுப்பியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சுரேஷ் ரெய்னா செய்த செயலை விமர்சனமாக பிசிசிஐ தெரிவிக்கவில்லை என்றபோதிலும், பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு குறித்து அறிவிக்கும் முன் பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்து ஆலோசித்தபின்புதான் அறிவிப்பார். அதுதான் வழக்கமான நடைமுறை. அந்த வழக்கமான நடைமுறையிலிருந்து ரெய்னா தவறியுள்ளார் என்பதை பிசிசிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுரேஷ் ரெய்னாவின் அறிவிப்பு அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும், பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

ஆனால், மகேந்திரசிங் தோனியைப் பொறுத்தவரை அவர் பிசிசிஐ அமைப்பிடம் அவர் தன்னுடைய ஓய்வு குறித்து முறைப்படி தெரிவித்ததால், அவரின் ஓய்வு அறிவிப்பை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கு(பிசிசிஐ) அனுப்பிய கடிதம் குறித்து அந்த அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிரடியாக ஆடக்கூடிய இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமைதான் எங்களிடம் தெரிவித்தார்.

ரெய்னாவின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய பேட்ஸ்மேனாக சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து வந்தார். அணியில் கீழ்நிலை வரிசையில் ரெய்னா களமிறங்கியபோதிலும், அவரின் அதிரடியான ஷாட்கள், நிதானமான ஆட்டத்தால் அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். யுவராஜ் சிங், தோனி ஆகியோருடன் நடுவரிசையில் சுரேஷ் ரெய்னா இணைந்து பல வெற்றிகரமான பாட்னர்ஷிப்களை கட்டமைத்துள்ளார். அவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எங்களது வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விடுத்த அறிவிப்பில் “ டி20 போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ரெய்னா ஒருவர். மிகச்சிறந்த மேட்ச்வின்னராக சுரேஷ் ரெய்னா இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ரெய்னாவின் ஆட்டத்தை மறக்க முடியாது. அவரின் 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டனாக சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்டவர் ரெய்னா. வெளிநாடுகளில் மூன்றுவிதமான டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றவர் ரெய்னா மட்டும்தான்.

18 டெஸ்ட் போட்டிகளில்விளையாடியுள்ள ரெய்னா ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 768 ரன்கள் சேர்த்துள்ளார். 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரெய்னா 5 சதம், 36 அரைசதம் உள்பட 5615 ரன்கள் குவித்துள்ளார். 78 டி20 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 1,605 ரன்களை ரெய்னா சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி20, டெஸ்ட் போட்டிகளில் தலா 13 விக்கெட்டுகளையும் ரெய்னா வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x