

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
குர்கவானில் மேதாந்தா மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
உ.பி. அமைச்சராகவும் இருந்த சேத்தன் சவுகானுக்கு ஜூலையில் கோவிட்-19 தொற்று பாசிட்டிவ் என்று வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று அவருக்கு சிறுநீரகப் பிரச்சினையும், ரத்த அழுத்தப் பிரச்சினையும் தோன்ற வெண்ட்டிலேட்டருக்கு வெள்ளிக்கிழமையன்று மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
அபாயகரமான தொடக்க வீரர் என்று கருதப்பட்ட சேத்தன் சவுகான் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், சுனில் கவாஸ்கரும், சேத்தன் சவுகானும் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களாக இருந்தனர், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கரும், சவுகானும் இணைந்து 10 டெஸ்ட் சதக்கூட்டணியை அமைத்துள்ளனர். 3,000 த்திற்கும் அதிகமான ரன்களை ஜோடி சேர்ந்து எடுத்துள்ளனர்.
தனிப்பட்ட சதமே இல்லாத இவரது நீண்ட கரியரில் 2084 டெஸ்ட் ரன்களை 31.57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 97தான் அதிகபட்ச ஸ்கோர். ஓவலில் இங்கிலாந்தின் 438 ரன்கள் இலக்கை விரட்டும் போது இவரும் கவாஸ்கரும் சேர்ந்து எடுத்த 213 ரன்களை இன்றும் மறக்க முடியாது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு டிடிசிஏவில் பல பதவிகளை வகித்தார். இந்திய அணியின் மேலாளராக இருந்துள்ளார். இருமுறை லோக்சபா எம்.பியாக இருந்துள்ளார்.
உ.பி.யில் கடந்த ஆண்டு வரை கூட விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் சேத்தன் சவுகான்.
இந்நிலையில் கிரிக்கெட் உலகம் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.