

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று இன்ஸ்டாகிராம் மூலமாக தன் ஓய்வை அறிவித்தார். இனி அவரை ஐபிஎல் கிரிக்கெட்டில்தான் பார்க்க முடியும் நீல நிற ஜெர்சியில் பார்க்க முடியாது.
இதனையடுத்து அவருக்கான பிரியாவிடை பலதரப்புகளிலிருந்தும் குவிந்து வருகின்றன. முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் என்று பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் தோனிக்கு ரசிகர்களாக இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
2011 உலகக்கோப்பையில் அந்த தொடர் முழுதும் மிகச்சிறப்பாக ஆல்ரவுண்ட் திறமை காட்டிய யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி கேப்டன் தோனி முன்னால் இறங்கியது அவரது கரியரில் மாஸ்டர் ஸ்ட்ரோக், இது அவர் மீதான மதிப்பை பலவிதங்களில் அதிகரித்தது. வணிக மதிப்பையும்தான்.
அதுவும் டவுன் ஆர்டர் மாற்ற ஸ்ட்ரோக்கை உறுதி செய்யும் விதமாக வெற்றிபெறுவதற்கான ஷாட்டை இலங்கை பவுலர் நுவான் குலசேகராவை லாங் ஆன் மேல் அடித்த சிக்ஸ், ஆழ்மனதில் பதியும் மூலப்படிவ சிக்ஸ் ஆக திகழ்ந்து வருகிறது, இதுவும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.
இந்த சிக்ஸர் குறித்து தோனி ஓய்வு பற்றி சுனில் கவாஸ்கர் கூறும்போது, “உ.கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் தன் முதல் போட்டியை விளையாடியது. நான் எம்.எஸ்.தோனியைச் சந்தித்தேன். அப்போது தோனியிடம், ‘இந்த உலகில் என் உயிர் பிரிய சில நிமிடங்களே இருக்கிறது என்று எனக்கு தெரியவருகிறது என்றால் நான் அந்த உலகக்கோப்பை இறுதி சிக்ஸரை மீண்டுமொருமுறை காட்டச் சொல்லி பார்த்துவிட்டுத்தான் உலகிற்கு விடைகொடுப்பேன் ஆம் நான் என் முகத்தில் புன்னகையுடன் போய்ச்சேருவேன்’ என்று நான் கூறினேன். ஆனால் எம்.எஸ்.டி வழக்கமான தன்னடக்கத்துடன் இருந்தார்.
அவர் சிரித்தார், ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. உண்மையில் அந்த சிக்ஸ் என்னை அப்படித்தான் உணரவைத்தது. ” என்றார் சுனில் கவாஸ்கர்.