நெருக்கடியான தருணங்களிலும் வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்; தோனி குறித்து ஸ்டாலின் புகழாரம்

தோனியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும்: கோப்புப்படம்
தோனியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும்: கோப்புப்படம்
Updated on
1 min read

நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர் என, தோனி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்திய மகேந்திர சிங் தோனி நேற்று ஓய்வு பெற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவுள்ளார். இதற்கான பயிற்சி முகாமில் பங்குபெற தற்போது சென்னை வந்துள்ளார் தோனி.

இந்நிலையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (ஆக.15) தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தோனி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதோடு, "இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கெனவே 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.16) தன் முகநூல் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்!

கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in