Published : 16 Aug 2020 07:40 AM
Last Updated : 16 Aug 2020 07:40 AM

151 வெற்றிகள் கொண்ட கேப்டன் - விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மென் தோனி: பாண்டிங்குக்கு அடுத்த இடத்தில்- சுவையான தகவல்கள்

இந்திய கிரிக்கெட்டை 2007-ம் ஆண்டின் பெரும் தோல்விப் பின்னடைவுக்குப் பிறகு தூக்கி நிறுத்தியவர் எம்.எஸ். தோனி என்றால் அது மிகையாகாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தோனி தான் என்பது புள்ளிவிவரங்களின் தகவல் மட்டுமல்ல, தோனியின் இந்திய அணிக்கான மிகச்சிறந்த பங்களிப்பாகும்.

குறைந்த ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 151 போட்டிகளில் வென்று ரிக்கி பாண்டிங்குக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

வெற்றிகரமான கேப்டன்களில் 2வதாகத் திகழ்கிறார் தோனி. ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்கள் 50.57 என்ற சராசரி. நீண்ட ஒரு கரியரில் ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேல் சராசரி வைத்திருப்பது சாதாரணமானதல்ல. 10 சதங்களை அடித்துள்ளார், சத எண்ணிக்கை இன்னும் அதிகமாகியிருக்கும் ஆனால் அவர் தன் டவுன் ஆர்டரை பின்களத்துக்குக் கொண்டு சென்று விட்டதாலும் பினிஷிங் முக்கியம் என்பதாலும் சதங்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை, அந்த விதத்தில் அவர் தன்னலமற்றவர்தான்.

3 ஐசிசி சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே கேப்டன். ஒருநாள் உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 உலகக்கோப்பை.

தோனியின் ஒருநாள் போட்டி வாழ்க்கை குறித்த சில சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

தோனியின் சராசரி 50.57. ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்தவர்களில் தோனியை அடுத்து நல்ல சராசரி வைத்திருப்பது விராட் கோலி மட்டுமே. தோனியும் கோலியும் மட்டுமே 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளனர், சச்சின் டெண்டுல்கர் 44.83 என்ற சராசரியுடன் 3ம் இடத்தில் இருக்கிறார்.

வெற்றிகரமான விரட்டல்களில் 47 முறை தோனி நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். இதற்கு அருகில் கூட யாரும் இல்லை. இவரை விட்டால் அடுத்த இடத்தில் ஜான்ட்டி ரோட்ஸ், இவர் வெற்றிகர விரட்டலில் 33 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். விரட்டலில் தோனி நாட் அவுட்டாக இருந்து இரண்டு முறைதான் இந்தியா தோற்றிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 2013ல் ஒரு போட்டி, இதை விட்டால் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இருமுறை சேசிங்கில் நாட் அவுட்டாக இருந்தும் இந்தியா தோற்றிருக்கிறது.

சிக்சரிலேயே ஒரு நாள் போட்டிகளில் 9 முறை வின்னிங் ஷாட்டை அடித்துள்ளார், இந்த புள்ளிவிவரத்துக்கும் அருகில் வேறு வீரர்கள் இல்லை.

ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 229 சிக்சர்கள், இதில் 5வது இடம் வகிக்கிறார்.

5 மற்றும் அதற்கும் கீழே இறங்கி 5 சதங்களை அடித்துள்ளார். ஜோஸ் பட்லர், யுவராஜ் சிங்குடன் இதில் இணைகிறார். இவ்வளவு பெரிய கரியரில் இரண்டு சிறந்த சதங்கள் என்றால் 183 நாட் அவுட் ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக 148.

விராட் கோலி 11,867 ஒருநாள் ரன்களில் 43 சதங்கள் 58 அரைசதங்கள் என்று அரைசதத்தை சதமாக மாற்றும் விகிதத்தில் முன்னணியில் இருக்கிறார் தோனி 10 சதம், 73 அரைசதம்.

கேப்டன் தோனி:

3 ஐசிசி சாம்பியன் பட்டங்களை இந்திய அணி இவர் தலைமையில் வென்றுள்ளது, ரிக்கி பாண்டிங் மட்டுமே இதில் தோனியை கடந்து நிற்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 332 போட்டிகளில் கேப்டன். இந்திய அணிக்கு 200 ஒருநாள் போட்டிகள் 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். கேப்டனாக 200 குறைந்த ஓவர் போட்டிகளில் 151 வெற்றிகளுடன் பாண்டிங்கின் 172 வெற்றிகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 53.55 என்ற சராசரி வைத்துள்ளர் தோனி. இதிலும் பாண்டிங் கேப்டனாக சிறந்து விளங்குகிறார்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் கேப்டனாக 2 போட்டிகளில் தோற்றுள்ளார். பாண்டிங், கிளைவ் லாய்ட் மட்டுமே தோனியைக் காட்டிலும் நல்ல வெற்றி-தோல்வி விகிதம் வைத்துள்ளனர். 2011 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றார், 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றார். டி20 உலகக்கோப்பையில் இவரது கேப்டன்சியில் 20 வெற்றி, 11 தோல்வி.

விக்கெட் கீப்பர் தோனி:

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 444 வீரர்களை அவுட் செய்திருக்கிறார் தோனி. இந்த வடிவத்தில் 3வது பெரிய எண்ணிக்கையாகும் இது. ஆனால் 123 ஸ்டம்பிங்கில் இவர்தான் அதிகம். டி20-யில் 91 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் இதிலும் 34 ஸ்டம்பிங் என்பதில் இவர்தான் அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்-கேப்டனாக 6641 ரன்களை எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் கேப்டன்களிலும் இவர்தான் முன்னணி.

(-ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x