Published : 15 Aug 2020 14:22 pm

Updated : 15 Aug 2020 14:22 pm

 

Published : 15 Aug 2020 02:22 PM
Last Updated : 15 Aug 2020 02:22 PM

நினைவிருக்கிறதா? மணிக்கு 149 கிமீ வேகம் வீசும் ஷிவம் மாவி, காயத்துக்குப் பிறகு முழு வீச்சுடன் தயார்

shivam-mavi-u-19-wc-india-kkr-ipl-2020

இந்தியா யு-19 அதிவேகப் பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை நாம் மறந்திருப்போம், காயத்துக்குப் பிறகு அவர் மீண்டும் முழு வீச்சுடன் தயாராகி ஐபிஎல் 2020-யை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

யு-19 உலகக்கோப்பையில் இன்றைய இங்கிலாந்து அணியில் இருக்கும் டாம் பேண்டனை முழு வேகப்பந்தில் பவுல்டு ஆக்கினார். 2018 யு-19 உலகக்கோப்பையில் இவர் மணிக்கு 149 கிமீ வேகம் வீசினார். இவரும் கமலேஷ் நாகர்கோடியும் இந்தியாவின் அடுத்த ஹோல்டிங், ராபர்ட்ஸ் என்ற பேச்சுகளே எழுந்தன.


அதுவும் ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, ஷிவம் மாவி இந்தியாவின் எதிர்கால பவுலிங் நட்சத்திரம் என்று ஒரு முறை புகழ்ந்திருக்கிறார்.

“அது ஒரு ஃபுல் லெந்த் பந்து லேட் இன்ஸ்விங், டாம் பேண்ட்டனின் மட்டை உள்விளிம்பை ஏமாற்றி நேராக ஸ்டம்பைத்தாக்கியது” என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அந்தக் கணத்தை இன்னமும் துள்ளலுடன் நினைவு கூர்ந்தார் ஷிவம் மாவி. பேண்ட்டன் போன்ற பேட்ஸ்மெனை வீழ்த்தியதை இன்றும் நினைவில் கொள்வது நன்றாக இருக்கிறது.

அதன் பிறகு, டிசம்பர் 2019-க்குப் பிறகு முதுகு ஸ்ட்ரெஸ் பிராக்சர் காரணமாக கிரிக்கெட் ஆட முடியாமல் போனது. 4 மாதகால மறுவாழ்வு காரணமாக இப்போது ஐபிஎல் 2020 சீசனுக்கு ஷிவம் மாவி முழு வீச்சுடன் தயாராகியிருக்கிறார்.

“ஐபிஎல் கிரிக்கெட் தள்ளிப் போடப்பட்டது எனக்கு ஒரு மறைமுக ஆசிர்வாதம், ஏனெனில் ஏப்ரலில் நடந்திருந்தால் தொடர்ச்சியாக இரண்டாவது சீசனிலும் அதில் ஆட முடியாமல் ஆகியிருக்கும். கடந்த 4 மாதம் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் வலுவாகத் திரும்ப இந்தக் காலக்கட்டம் உதவியது.

அடுத்தடுத்து 2 காயங்கள் நிச்சயம் நல்லதல்ல. மன ரீதியாகக் கூட சோர்ந்து போயிருந்தேன். ஆனால் என்சிஏவில் ஆனந்த் தாத்தே எனக்கு சிறந்த ஊக்குவிப்பாளராக அமைந்தார். படிப்படியாக நான் முழு ஒத்திசைவுடன் ஆகி பந்து வீச 4 மாதங்கள் ஆகியுள்ளன.

புவனேஷ்வர் குமார் நிறைய சொல்லிக் கொடுப்பார். அவர்தான் ஸ்விங்தான் என் பலம் என்பார். நான் வேகமாக வீசுகிறேன், எனவே அதில் சிக்கல் இல்லை. ஸ்விங் மட்டும் தக்கவைக்க முடிந்தால் 135 கிமீ வேகத்திலேயே என் பந்துகள் ஆடக் கடினமாகி விடும்.

கொல்கத்தா அணிக்கு ஆடிய போது என் முதல் விக்கெட்டை என்னால் மறக்க முடியாது. கவுதம் கம்பீருக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் வீசுவது சவால் ஆனது. அவர் ஏற்கெனவே கொல்கத்தா அணியை 2 முறை சாம்பியனாக்கிய கேப்டன், அந்த முறை டெல்லிக்கு ஆடினார். நான் ஒரு பந்தை வேகமாக வீச அது சறுக்கிக் கொண்டு சென்றது, கம்பீர் அதனை பஞ்ச் செய்ய நினைத்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனார், எனக்கு மயிர்க்கூச்செறிந்தது.

அதே போல் ஆந்த்ரே ரஸல் போன்ற எங்கு போட்டாலும் வெளுத்து வாங்கும் வீரருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வலையில் வீசி அனுபவம் பெற்றுள்ளேன். சில வேளைகளில் என் பந்துகளை அவர் விரும்பும்படி ஆட முடியாமல் போகும் என்னை உற்று நோக்குவார், அதுவே அது நல்ல பந்து என்பதற்கான அறிகுறியாகும். அவரைப் போன்ற ஒருவருக்கு வீசும் நம்பிக்கை இருந்து விட்டால், யாருக்கு வேண்டுமானாலும் வீசலாம்.

இப்போது நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்வுடன் இருக்கிறேன், மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக பவுல் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார் ஷிவம் மாவி.

தவறவிடாதீர்!


Shivam MaviU-19 WCIndiaKKRIPL 2020கிரிக்கெட்ஷிவம் மாவிஇந்தியாஐபிஎல் 2020கவுதம் கம்பீர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கேகேஆர்ஆண்ட்ரே ரசல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author