Last Updated : 14 Aug, 2020 03:13 PM

 

Published : 14 Aug 2020 03:13 PM
Last Updated : 14 Aug 2020 03:13 PM

கருப்பரின வீரர்களை ஒதுக்கிய  ‘இனவெறி’ கேப்டனா? : சில வீரர்களின் காட்டமான புகார்களை மறுக்கும் கிரேம் ஸ்மித்

தென் ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் தாமி சோலகிளே என்பவர் கருப்பரினத்தைச் சேர்ந்தவர், இவர் சமீபத்தில் கிரேம் ஸ்மித் கேப்டனாக இருந்த போது கருப்பரின வீரர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் என்று பரபரப்புக்குற்றம்சாட்டியிருந்தார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள கிரேம் ஸ்மித்துக்கு இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் தான் பெரிதும் காயமடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தாமி சோலகிளே என்ற வீரர் 2015-ல் சுதாட்டப்புகாரில் சிக்கவைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டார். இவர் கிரேம் ஸ்மித் கேப்டனாக இருந்த காலத்தில் தன்னையும் சில கருப்பரின வீரர்களையும் ஆதரிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் இப்படி தவறிழைத்தவர்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் போற்றிப் பாதுகாத்ததாகவும் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் பள்ளிகள் கிரிக்கெட்டில் தாமி சோலகிளே, கிரேம் ஸ்மித்துக்குக் கேப்டனாக இருந்தவர், ஆனால் அதன் பிறகு ஸ்மித்தின் கரியரையும் சோலகிளேயின் கரியர் ஒழிக்கப்பட்டதையும் வைத்துப் பார்த்தாலே அங்கு பாகுபாடு எப்படி என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஸ்மித் கூறும்போது, “ஸ்கூல் ஜூனியர் மட்டத்தில் சோலகிளே எனக்கு கேப்டனாக இருந்தவர். அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வெறுப்புகளை என் மீது தனிப்பட்ட முறையில் கொட்டித் தீர்க்க முடியாது.

பிற இனம் உள்ளிட்ட அனைத்து வீரர்களுடனான என் உறவுகள் பற்றி ஏற்கெனவே ஆவண பூர்வமாக உள்ளன. அனைவரது பாராட்டையும் பெற ஒருவரால் முடியாது. ஆனால் இதுதான் தொழில்பூர்வ விளையாட்டு என்பது” என்றார்.

மார்க் பவுச்சருக்குப் பிறகு சோலகிளே அணியில் வர காத்திருந்தார். ஆனால் அணியில் அவரை நிலை நிறுத்திக் கொள்ள போதிய வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்மித் மேலும் கூறும்போது, “எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், சங்கடம் தரும் ஒன்றை உண்மை போல் கூறுவதையும் நான் மிகவும் வலுவாக எதிர்க்கிறேன், இது என்னைக் காயப்படுத்துகிறது. அணியை புதிய திசையில் நகர்த்த ஷான் போலக், லான்ஸ் குளூஸ்னர், மகாயா நிடினி ஆகியோரையும் அணியிலிருந்து எடுத்து விட முடிவு செய்தோம். ஆனால் இந்த லெஜண்ட்கள் குறித்த முடிவுக்குப் பின்னால் உணர்ச்சிகரமான விவாதங்கள் இருந்தன.

மகாயா நிடினி எப்படி அணியிலிருந்து விலக்கப்பட்டாரோ அதே போன்றுதான் ஷான் போலக்கும் நீக்கப்பட்டார். எந்த ஒரு வீரரும் இன்னும் பங்களிப்பு செய்வோம் என்று கருதக்கூடியவர்கள்தான். அணியின் தேவைக்கேற்ப வீரர்களை மாற்றலாம் ஆனால் சில இடங்களில் ஸ்பெஷலிஸ்ட்கள்தான் தேவைப்படுவார்கள்.

துரதிர்ஷ்டவசமாக சோலகிளே விக்கெட் கீப்பர் என்பதால் ஒரே இடத்துக்குத்தான் அவர் போட்டியிட்டார். இது அவருக்கு எவ்வளவு வெறுப்பாக இருந்திருக்கும் என்பது புரிகிறது, ஆனால் சர்வதேச கிரிக்கெட்டைப் பார்க்காமலேயே எத்தனையோ விக்கெட் கீப்பர்கள் இருக்கின்றனர். ஏனெனில் ஒரு அணியில் விக்கெட் கீப்பர் என்பவர் நீண்ட காலம் நீடிக்கக் கூடியவர்.

இன்னொரு முக்கியமான விஷயம் என் கேப்டன்சி காலத்தில் அணித்தேர்வில் எனக்கு குரல் கிடையாது. நான் கருத்து வேண்டுமானால் சொல்லலாமே தவிர வாக்களிக்கும் உரிமை தேர்வாளர்களுக்கும் பயிற்சியாளருக்கும் மட்டுமே இருந்தது. சோலகிளே குற்றம்சாட்டும் 2012 இங்கிலாந்து தொடரில் அத்தனை தேர்வாளர்கள் இருந்தனர்.

சோலகிளே அணியில் ரிசர்வ் விக்கெட் கீப்பராக இருந்தார், டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பர். இதை கேரி கர்ஸ்டன் அவரிடம் கூறிவிட்டார். இதை தாமியும் ஏற்றுக் கொண்டார். நான் ஒரு வீரர் மட்டுமே எனக்கு எந்தத் தீர்மான அதிகாரமும் இல்லை, என்று கிரேம் ஸ்மித் கடுமையாக மறுத்துள்ளார்.

சமீபமாக முன்னாள் கருப்பரின வீரர்கள், பயிற்சியாளர்கள் தென் ஆப்பிரிக்க கிரிகெட் வாரியத்தின் பாரபட்சமான பாகுபாட்டைக்கண்டித்துப் பேசியுள்ளனர். கருப்பரின பயிற்சியாளர்கள், தகுதியான பயிற்சியாளர்கள் ஒதுக்கப்பட்டு மார்க் பவுச்சரை எப்படி பயிற்சியாளராக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.

பவுச்சருக்கு லெவல் 2 கோச்சிங் சான்றிதழ்தான் உள்ளது. இது முன்னாள் வீரர்களுக்கு தானாகவே கிடைப்பது, ஆனால் கருப்பரின பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான முறையான பயிற்றுவிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x