

பாகிஸ்தான் ஹாக்கி தொடர்பாக இந்தியா கூறி வரும் புகார்கள், தவறான புரிதல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண, ஹாக்கி இந்தியா அமைப்புக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
டிசம்பரில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவை பாகிஸ்தான் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அப்போது மைதானத்தில் மேலாடையைக் கழற்றியும், நடுவிரலை உயர்த்தி ஆபாசமான சைகை காட்டியும் பாகிஸ்தான் வீரர்கள் அநாகரி கமாக நடந்து கொண்டனர்.
இச்சம்பவத்துக்கு இதுவரை பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகமோ, வீரர்களோ மன்னிப்புக் கோர வில்லை. இதைச் சுட்டிக்காட்டி நேற்று முன்தினம் பேசிய ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா, ‘இவ்விவகா ரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. குறைந்தபட் சம் அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
ஹாக்கி இந்தியா லீக் போட்டி களில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பத்ரா மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி சம்மேள தலைவர் ஷாபாஷ் அகமது, இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஹாக்கி தொடர்பான பிணக்குகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள ஹாக்கி இந்தியா அமைப்பு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஷாபாஷ் அகமது கூறியதாவது: கடுமை யான அறிக்கைகள் வெளியிடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. இரு அமைப்புகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண் டும். ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) போட்டிகளில் அனு மதிக்கப்படாதது பாகிஸ்தான் வீரர் களுக்கு நிச்சயம் பின்னடைவு. அவர்கள் ஹெச்ஐஎல்லில் சேர்த் துக் கொள்ளப்பட்டால் ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், நன்றாக சம்பாதிக்கவும் முடியும் என்ப தில் சந்தேகமில்லை. பேச்சுவார்த் தைக்கு ஹாக்கி இந்தியா முன் வந்தால் வரவேற்போம். இருநாடு களுக்கும் இடையே போட்டிகளை நடத்துவது, விளையாட்டை ஊக்கு விப்பது மட்டுமின்றி, ஹாக்கிக்கு வர்த்தகரீதியான பிரபலத்தையும், வீரர்களுக்கு பணத்தையும் ஈட்டித் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேசமயம் பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டன் முகம்மது இம்ரான், “இந்தியா ஒன்றுமில்லா ததை பிரச்சினை ஆக்குகிறது. மன்னிப்புக் கோர வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை குழந்தைத் தனமானது. சம்பந்தப்பட்ட இரு வீரர்களுக்கு தடை விதித்ததுடன் பிரச்சினை முடிந்தது. தற்போது மீண்டும் கிளறுவது ஏன்” எனத் தெரிவித்துள்ளார்.