Published : 11 Aug 2020 02:40 PM
Last Updated : 11 Aug 2020 02:40 PM

2011 உ.கோப்பை: பாக்.கிற்கு எதிராக அரையிறுதியில் சச்சின் ஆடியது நல்ல இன்னிங்ஸ் அல்ல: ஆஷிஷ் நெஹ்ரா வெளிப்படை

இந்தியா -பாகிஸ்தான் என்றாலே ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பதற்றமும் ஆவேசமும் வீரர்களிடத்திலும் தொற்றிக் கொள்வது வழக்கம்தான். வெளியில் வேண்டுமானால் இரு அணி வீரர்களும் கேப்டன்களும் மற்ற போட்டிகள் போல்தான் என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கூற முடியும்.

1996 உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியாவுக்கு எதிராக வாசிம் அக்ரம் ஆடாமல் விலகியது உட்பட பல்வேறு தருணங்களை சுட்டிக்காட்ட முடியும். ஒருமுறை இம்ரான் கான் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் பந்து வீச வரவேயில்லை கடைசியில் பாகிஸ்தான் வென்றது வேறு விஷயம். ஆனால் பதற்றம் என்பது இரு அணிகளுக்குமானதுதான்.

இப்படிப்பட்ட பதற்றம் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் ஆஷிஷ் நெஹ்ராவின் இப்போதைய கருத்து.

2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் எடுத்த 85 ரன்கள் நல்ல இன்னிங்ஸ் அல்ல, ஏகப்பட்ட கேட்ச் வாய்ப்புகள் கோட்டை விடப்பட்ட இன்னிங்ஸ் அது என்பது அனைவரும் அறிந்ததே.

கிரேட்டஸ்ட் ரைவல்ரி என்ற நிகழ்ச்சிக்காக ஆஷிஷ் நெஹ்ரா கூறும்போது, “சொல்லத் தேவையேயில்லை, சச்சின் டெண்டுல்கருக்கே தெரியும், அந்த இன்னிங்ஸில் அவருக்கு அதிர்ஷ்டம் எப்படி கைகொடுத்தது என்பது. டெண்டுல்கர் 40 ரன்கள் எடுக்கும் போதெல்லாம் நீங்கள் பார்க்கலாம் ஒன்று மோசமான தீர்ப்பாகி விடும் அல்லது கேட்ச்கள் விடப்படும். அதிர்ஷ்டம் எப்போதும் ஒருவருக்குச் சாதகமாகவே செல்லாது.

உலகக்கோப்பைப் பற்றி பேசினால் இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-இங்கிலாந்து அல்லது எந்த ஒரு அணியாக இருந்தாலும் பெரிய அழுத்தம்தான். அரையிறுதிக்குள் நுழைந்தாகி விட்டது, நல்ல அணிதான் என்றாலும் கடைசியில் அழுத்தத்தை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் ஆட்டம் உள்ளது. டெண்டுல்கர் மேல் அந்தப் போட்டியில் அழுத்தம் அதிகமாக இருந்தது, அதனால் அவரது அந்த இன்னிங்ஸ் கீறல் விழுந்த இன்னிங்ஸ் ஆகி விட்டது, இது அவருக்கே தெரியும்” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் அந்தப் போட்டியில் 85 ரன்கள் எடுக்க அதுவே அந்தப் போட்டியின் இருதரப்புக்கான அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகவும் அமைந்தது, இந்திய அணி 261 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் 231 ரன்களுக்குச் சுருண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x