

38 வயதான இங்கிலாந்தின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனக்கு ‘என்டே’ கிடையாது, ஆஷஸும் ஆடுவேன், அதற்கு மேலும் ஆடுவேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து ஓய்வு குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
154 டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னிடம் இன்னும் ஆற்றல் இருக்கிறது எனவே ஓய்வு குறித்த பேச்சுக்கே இப்போதைக்கு இடமில்லை என்றார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “தனிப்பட்ட முறையில் எனக்கு வெறுப்பேற்றிய வாரமாக இது அமைந்தது. சரியாக வீசவில்லை, நல்ல ரிதமில் இல்லை. 10 ஆண்டுகளில் முதல் முறையாக களத்தில் உணர்ச்சிவயப்பட்டேன்.
கொஞ்சம் வெறுப்படைந்தேன் என்பது உண்மைதான். நான் முதன் முதலில் ஆடத்தொடங்கிய போது ஏற்பட்ட வெறுப்பு போல் இருந்தது இது. கோபத்தில் இருக்கும் போது இன்னும் வேகம் இன்னும் வேகம் என்று முயற்சிப்போம் ஆனால் அது பயனளிக்காது.
ஆம் நான் அடுத்த ஆஷஸ் தொடரில் ஆட விரும்புகிறேன். ஆனால் அதுவே என் கவனம் என்று அர்த்தமல்ல.
எவ்வளவு நாட்கள் ஆட முடியுமோ அவ்வளவு நாட்கள் ஆட விரும்புகிறேன், இன்னும் எனக்கு ஆட்டத்தின் மீது தீரா அவா உள்ளது.
அடுத்த போட்டியில் அனைத்தையும் சரி செய்வேன். நான் அவ்வளவு மோசமாக வீசவில்லைதான் ஆனால் அப்படி எனக்கு ஒரு உணர்வு இருந்தது. 2வது இன்னிங்சில் நான் வாய்ப்பை உருவாக்குகிறேன் ஆனால் கேட்சை விட்டால் என்ன செய்வது, வெறுப்பு என்னை சூழ்கிறது.
அதனால்தான் களத்தில் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டேன். வெறுப்படைந்ததும் உண்மைதான். வேகமாக வீச வேண்டும் என்று வெறுப்பில் வீசினேன் இதனால் 2 நோபால்களை வீசினேன், நோ-பால்கள் வீசக்கூடியவனல்ல நான்.
கேப்டனும், பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்தால் நான் அடுத்தப் போட்டியில் அனைத்தையும் சரி செய்வேன்.
600 விக்கெட்டுகள் எடுத்தால் நான் மகிழ்ச்சியடைவேன், எடுக்க முடியாவிட்டாலும் ஒன்றும் வருத்தமில்லை. இருப்பதைக் கொண்டு மகிழ்வேன்.
அனைத்தும் சரியாக நடந்து அலிஸ்டர் குக் ஆடிய 161 டெஸ்ட் போட்டிகளை நானும் ஆடிவிட்டால் மகிழ்ச்சிதான்” என்றார் ஆண்டர்சன்.