

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பிரதான ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் பிரதான ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனம் இருந்தது.
ஆனால், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் அலை நாடு முழுவதும் எழுந்தது.
இதையடுத்து, ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனமான விவோ செல்போன் நிறுவனம் அளித்து வந்த ஸ்பான்ஸர்ஷிப்பையும் இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்து பிசிசிஐ அறிவித்தது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸர்ஷிப் யார் என்பது தெரியவில்லை. அதற்கான விருப்ப மனுக்களையும் வரும் 14-ம் தேதிக்குள் அளிக்க பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்துடன் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை ஆண்டுக்கு ரூ.440 கோடி வீதம் ரூ.2,190 கோடி ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ செய்துள்ளது.
இந்தச் சூழலில் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் ஐபிஎல் டி20 தொடரின் பிரதான ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜாராவாலாவிடம் பிடிஐ நிருபர் கேட்டபோது, “ஐபிஎல் டி20 ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு பதஞ்சலி நிறுவனம் முயல்கிறது எனும் செய்தியை மறுக்கவில்லை. உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்போம் என்ற அடிப்படையில் உள்நாட்டு நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல இந்தப் போட்டித் தொடர் நல்ல களம்.
இதைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். ஆனால், இது தொடர்பாக இறுதி முடிவை நிறுவனத்தின் தலைமைதான் எடுக்கும். ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்தால் எடுக்கலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
ஹரித்துவாரைச் சேர்ந்த பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.10,500 கோடி விற்று முதல் கொண்டது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.8,329 கோடி வருவாயை பதஞ்சலி நிறுவனம் ஈட்டியது. பெரும்பாலான ஆயுர்வேதப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பதஞ்சலி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கரோனானில் எனும் மருந்தைக் கண்டுபிடித்து அந்த மருந்தால் கரோனா வைரஸைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது.
மேலும், ''பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்தை விற்பனை செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. அந்த மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்து மட்டும்தான். ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து அல்ல” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.