

தென்கொரியாவின் சியோல் நகரில் தொடங்கியுள்ள கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையரில் இந்தியாவின் பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் பி.காஷ்யப் முதல்சுற்றோடு வெளியேறினார்.
உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவில் பி.வி. சிந்து, முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் 21-19, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.
இதற்கு மூன்று போட்டிகளில் ரட்சனோக்கை எதிர்த்து விளையாடியுள்ள சிந்து, தற்போதுதான் முதன் முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். இருவருமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் 3-7 எனப் பின்தங்கியிருந்த சிந்து, எழுச்சி பெற்று ரட்சனோக்கை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப், ஹாங்காங்கின் வெய் நானை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றிய காஷ்யப், அடுத்த இரு சுற்றுகளை 16-21, 18-21 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்து, முதல் சுற்றோடு வெளியேறினார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரதன்யா காத்ரே, சிக்கி ரெட்டி ஜோடி ஜப்பானின் ஷிஸுகா மட்சுவோ, மாமி நய்டோ ஜோடியிடம் 24-26, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆடவர் ஒற்றையரில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்திலுள்ள இந்தியாவின் அஜய் ஜெய்ராம், 6-வது இடத்திலுள்ள டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னை வீழ்த்தி அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார். இப்போட்டியை 29 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த அஜய் 21-15, 21-15 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றில் நுழைந் தார்.