இந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை: ஐசிசி திட்டவட்டம்
இந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கரோனாவில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைப் போட்டி 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டி கரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டி, 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் நடத்தப்படும். அப்போது தகுதிச்சுற்று புதிதாக நடத்தப்படும்.
அதேசமயம் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்படும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. திட்டமிடபடி இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறும்.
2020-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை எந்த அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டதோ, விதிமுறைகள் வகுக்கப்பட்டதோ அதே விதிமுறையில்தான் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கும்.
நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருந்த மகளிருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி, 2022 பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தகுதிச்சுற்று நடத்துவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. ஆதலால், இப்போதைக்கு இந்தத் தொடரை நடத்துவதில் சாத்தியமில்லை என்பதால் ஒத்திவைக்கப்பட்டது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் உலகக்கோப்பைப் போட்டி 2022-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ் , ஜூலியன் கோஸாமி ஆகியோரின் நிலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால், இந்த உலகக்கோப்பைப் போட்டியோடு அவர்கள் ஓய்வுபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை.
