அமெரிக்க ஓபன்: ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி: காலிறுதியில் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஹேலப், அசரென்கா

அமெரிக்க ஓபன்: ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி: காலிறுதியில் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஹேலப், அசரென்கா
Updated on
2 min read

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆரம்ப கட்ட சுற்றில் முர்ரே தோற்றது இதுவே முதல்முறையாகும்.

அதேநேரத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ருமேனிய வீராங்கனை சைமோனா ஹேலப், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர் சன் 7-6 (5), 6-3, 6-7 (2), 7-6 (0) என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரேவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

2010 அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றில் தோல்வி கண்ட முர்ரே, அதன் பிறகு பங்கேற்ற 18 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் தொடர்ச்சியாக காலிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், இப்போது 4-வது சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.

தோல்விக்குப் பிறகு பேசிய முர்ரே, “தொடர்ந்து சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்துவதற்காக கடுமையான பயிற்சி பெற்றிருந் தேன். அதனால் இப்போது தோற் றிருப்பது பெரும் ஏமாற்றமளிக் கிறது. ஆரம்ப கட்டத்தில் கடினமான போட்டிகளில் சிறப்பாக ஆடி வென்றிருந்த நிலையில், 4-வது சுற்றில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தோற்றிருக்கிறேன். இது போன்ற போட்டிகளில் தோற்கும் போது அது மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

ஆண்டர்சன்-வாவ்ரிங்கா மோதல்

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஆண்டர்சன், அது குறித்துப் பேசுகையில், “இது என்னுடைய வாழ்க்கையின் சிறந்த ஆட்டம். இது என்னுடைய மிகப்பெரிய சாதனையாகும். காலிறுதிக்கு முன்னேறியதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். முர்ரேவை வீழ்த்தியிருப்பதால் ஒரு படி முன்னோக்கி சென்றிருப்பது போன்று உணர்கிறேன். வியப்பாக இருக்கிறது” என்றார். 1992-க்குப் பிறகு அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையும் ஆண்டர்சனுக்கு கிடைத்துள்ளது.

ஆண்டர்சன் தனது காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா தனது 4-வது சுற்றில் 6-4, 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெனால்டு யங்கை தோற்கடித்தார். கடந்த 9 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 8-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் வாவ்ரிங்கா.

ரோஜர் ஃபெடரர் வெற்றி

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் 7-6 (0), 7-6 (6), 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபனில் 6-வது பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கும் ஃபெடரர், அடுத்ததாக போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை சந்திக்கிறார். காஸ்கட் தனது முந்தைய சுற்றில் 2-6, 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.

ஃபெடரருக்கு எதிரான காலிறுதி குறித்துப் பேசிய காஸ்கட், “நிச்சய மாக அந்தப் போட்டியில் ஃபெடரர் தான் வெல்வார். நான் இழப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.

ஹேலப் வெற்றி

மகளிர் ஒற்றையர் 4-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியா வின் சைமோனா ஹேலப் 6-7 (6), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தை 2 மணி, 38 நிமிடங்கள் ஆடிய ஹேலப், கடுமையான வெயில் காரணமாக 10 நிமிடம் இடைவேளை எடுத்துக் கொண்டார்.

1997-க்குப் பிறகு அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறி யிருக்கும் முதல் ருமேனிய வீராங்கனையான ஹேலப், அது குறித்துப் பேசுகையில், “அமெரிக்க ஓபனில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது மிகக் கடினமான போட்டி” என்றார். ஹேலப் தனது காலிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசெரன் காவை சந்திக்கிறார். அசரென்கா தனது 4-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வர்வரா லெப்சன்கோவை தோற் கடித்தார்.

விட்டோவா வெற்றி

செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார். 2001-க்குப் பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு முன்னேறிய முதல் செக்.குடியரசு வீராங்கனை விட்டோவா ஆவார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் விட்டோவா, தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவை சந்திக்கிறார். பென்னட்டா தனது 4-வது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தினார்.

சமந்தாவுடன் இதுவரை 7 முறை மோதியிருக்கும் பென்னட்டா, அவையனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். விட்டோவாவும், பென்னாட்டாவும் இதுவரை 6 முறை மோதியுள்ளனர். அதில் கடைசியாக மோதிய 3 ஆட்டங்களில் பென்னட்டா தோல்வியடைந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in