Published : 07 Aug 2020 08:32 AM
Last Updated : 07 Aug 2020 08:32 AM

ஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326;  ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த அப்பாஸ்: இங்கிலாந்து திணறல்

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சதநாயகன் ஷான் மசூத்.

மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 92/4 என்று திணறி வருகிறது.

ஆட்ட முடிவில் ஆலி போப் 46 ரன்களுடனும் ஜோஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். பாக் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் ஷாஹீன் அஃப்ரீடி மற்றும் யாசிர் ஷா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக 139/2 என்று தொடங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம் அதே ஸ்கோரில் 69 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கவர்ந்திழுக்கும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். தொடக்க வீரர் ஷான் மசூத் 319 பந்துகள் ஆடி 18 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 156 ரன்கள் எடுத்தார். 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் பிராட், ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி நேற்று ஆட்டம் தொடங்கி முதல் செஷனில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பாபர் ஆஸம் தன் முதல் நாள் ஸ்கோரைத் தாண்டாமல் முதல் ஓவரிலேயே ஆண்டர்சனிடம் 69 ரன்களுக்கு வெளியேறினார்.

ஷான் மசூத் அபாரமான தன் அரைசதத்தை எடுத்து ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சினாலும் தொடர் விக்கெட்டுகளினால் பாகிஸ்தான் உணவு இடைவேளையின் போது 187/5 என்று ஆனது.

முதல் நாள் போலவே உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து ஆட்டத்தில் உத்வேகம் இல்லை. பீல்டிங்கில் இங்கிலாந்து சொதப்ப ஷான் மசூதும் ஷதாப் கானும் (45) பிரமாதமாக ரன்களை ஓடியே விரைவு கதியில் எடுத்தனர். 6வது விக்கெட்டுக்காக இருவரும் சதக்கூட்டணி அமைத்தனர்.

31 ஓவர்களில் பாகிஸ்தான் 125 ரன்கள் எடுத்தது, இது ஒரு சுறுசுறுப்பான தருணமாக பாக். பேட்டிங்கில் அமைந்தது. ஷான் மசூத் 251 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் தன் 4வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். ஜோ ரூட், நம்மூர் தோனி போல் உணவு இடைவேளைக்குப்பிறகு கேப்டன்சி தவறு செய்தார், ஸ்பின்னர் பெஸ்ஸைக் கொண்டு வந்ததோடு தானே ஒரு முனையில் வீசினார். இது இங்கிலாந்து வர்ணனையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் பெஸ் 74 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தது 2வது புதிய பந்து இங்கிலாந்து விரும்பிய முடிவுகளை அளிக்காததாலேயே.

ஜோ ரூட் கேப்டன்சியில் இன்னொரு புரியாத அம்சம் உணவு இடைவேளைக்குப் பிறகு 24 ஓவர்கள் வரை ஆர்ச்சரைக் கொண்டு வரவில்லை அதே போல் 2வது புதிய பந்து எடுத்த பிறகு 19வது ஓவர்தான் கொண்டு வரப்பட்டார், இதற்குப் பெயர்தான் ஒழிக்கப்படுதலாகும். ஆனால் ஆர்ச்சரோ மீண்டும் வந்து 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டூவர்ட் பிராட் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஷான் மசூதையும் நசீம் ஷாவையும் வீழ்த்தியதில் இங்கிலாந்து 326 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபீக், ரிஸ்வான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹின் அப்ரீடி, நசீம் ஷா ஆகியோர் வந்ததும் போனதுமாக இருந்ததால் பாகிஸ்தான் 350 ரன்களுக்குள் சுருண்டது.

இங்கிலாந்து பேட்டிங்கைத் தொடங்கிய போது 326 தானே என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து பவுலர்களுக்கு எடுக்காத ஸ்விங், அப்பாஸ், ஷாஹின் அப்ரீடிக்கு எடுக்க இங்கிலாந்து 12/3 என்று சரிந்தது.

ரோரி பர்ன்ஸுக்கு தொடக்கம் முதலே பந்தை உள்ளே கொண்டு வந்து அச்சுறுத்திய ஷாஹின் ஷா அஃப்ரீடி ஒரு பந்தை கால்காப்பில் வாங்க வைத்தார் நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் கொடுக்கப்பட்டது.

உடனேயே ஷாஹின் ஷா அப்ரீடி, ஜோ ரூட்டை டக் அவுட் செய்திருப்பார், இம்முறை எல்.பி. தீர்ப்பு களத்தில் அளிக்கப்பட்டது, ஆனால் ரிவியூவில் பிழைத்தார் ஜோ ரூட்.

டாம் சிப்லி 8 ரன்களில் அப்பாஸின் அபாரமான இன்கட்டருக்கு முன் கால் பேடில் வாங்கி எல்.பி.ஆனார்.

அடுத்துதான் மிக முக்கியமான விக்கெட்டை கைப்பற்றினார் முகமது அப்பாஸ். பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்கும் முன்னரே அப்பாஸ் ரிதமை காலி செய்ய சற்றே மேலே வந்தார், ஆனால் பந்தை உள்ளே கொண்டு வந்த அப்பாஸ் சற்றே வெளியே எடுக்க ஆஃப் ஸ்டம்ப் மேல் முனையில் பட்டு ஸ்டம்ப் ஆடியது. டக் அவுட் ஆனார் அபாய வீரர் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து 12/3.

ஜோ ரூட் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் யாசிர் ஷா பந்தை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ரிஸ்வான் கேட்சுக்கு வெளியேற இங்கிலாந்து 62/4 ஆனது.

ஆலி போப் சிறப்பாக ஆடி 46 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இன்று 3ம் நாள் ஆட்டம் அதிசுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x