

மாரடைப்பால் மரணமடைந்த பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் உடல் அரசு மரியாதையுடன் கொல்கத்தா வில் நேற்று தகனம் செய்யப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 35 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பணிகளை வகித்து வந்த டால்மியாவுக்கு கடந்த 17-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அடைப்பு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் நலமாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு மீண்டும் மார டைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். டால்மியாவின் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசு மரியாதையுடன் டால்மியாவின் உடல் தகனம் செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்படி டால்மியாவின் இறுதிப் பயணம் அவருடைய வீட்டிலிருந்து பகல் 12.15 மணியளவில் புறப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வந்தடைந்தது. அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக அஞ்சலி செலுத்துவதற் காக டால்மியா வின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் பிசிசிஐ தலைவர்கள் என்.சீனிவாசன், சரத் பவார், சஷாங்க் மனோகர், பிசிசிஐயின் தற்போதைய செயலாளர் அனுராக் தாக்குர், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 3 மணியளவில் முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கொல்கத்தா போலீஸார் 3 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவருடைய உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மம்தா பானர்ஜி, கங்குலி ஆகியோரும் மயானத்துக்கு வந்தனர். 4 மணிக்கு டால்மியாவின் உடலுக்கு அவருடைய மகன் அபிஷேக் சந்தனக் கட்டையால் தீ மூட்டினார்.
கிரிக்கெட் வாழ்க்கை
டால்மியாவுக்கு சந்திரலேகா என்ற மனைவியும், வைஷாலி என்ற மகளும், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். கிரிக்கெட்டில் வல்லரசுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை டால்மியாவையே சேரும். 1979-ல் பிசிசிஐயில் இணைந்த டால்மியா, 1983-ம் ஆண்டு பிசிசிஐ பொருளாளர் ஆனார். 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார். 1992-ம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக உயர்ந்தார். 1993-ல் இந்திய கிரிக்கெட்டை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்ற டால்மியா, 1996 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்பை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.
1997-ம் ஆண்டு ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற டால்மியா, 2000-ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். 2001-ம் ஆண்டு பிசிசிஐ தலைவர் ஆன டால்மியா, 2004 வரை அந்தப் பதவியில் நீடித்தார். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது நிகழ்ந்த சூதாட்ட விவகாரத்தால் அப்போதைய தலைவர் என்.சீனிவாசன் பதவியை இழந்ததார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் மீண்டும் பிசிசிஐ தலைவர் ஆன டால்மியா, இப்போது மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
ஐசிசி இரங்கல்
டால்மியாவின் மரணத்துக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது. டால்மியாவின் குடும்பம், நண்பர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு ஐசிசி சேர்மன் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட்டுக்கு டால்மியா செய்த பங்களிப்புக்காக அவர் நீண்ட காலம் நினைவுகூரப்படுவார். டால்மியா வின் மரணத்தால் மிகுந்த வேதனை யடைந்துள்ளேன். அவர் தொலை நோக்கு பார்வை கொண்ட கிரிக்கெட் நிர்வாகி. தனது வாழ்க்கையையே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். அவர் பிசிசிஐ தலைவராக இருந்தபோது இந்திய கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. ஐசிசி தலைவராக இருந்தபோது உலக கிரிக்கெட் வலு வானதாக உருவெடுத்தது. கிரிக்கெட் தனது மிகப்பெரிய விசுவாசிகளில் ஒரு வரை இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணிகளுக்காக டால்மியா பெரிய அளவில் பாராட்டப்பட்டவர்.
அவர் ஐசிசி தலைவராக இருந்தபோது கிரிக்கெட் விளையாட்டு உலகமயமாக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
தோனி, கோலி இரங்கல்
இந்திய ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கிரிக்கெட்டில் பெரும் பங்களிப்பு செய்த டால்மியாவுக்கு மரியாதை செய்கிறேன். அவருடைய ஆன்மா அமைதியில் திளைக்கட்டும். அவருடைய இழப்பைத் தாங்கும் திடத்தை அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் கொடுக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டால்மியாவின் மரணம் வேதனையளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கிரிக்கெட்டில் டால்மியாவின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டிலும் டால்மியா மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார். அவருடைய மரணத்தால் இப்போது மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எப்போதுமே வீரர்களின் ஆதர வாளராக இருந்துள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் கூடுகிறது பிசிசிஐ எஸ்ஜிஎம்
பிசிசிஐ தலைவராக இருந்த டால்மியாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அவருக்கு சிறப்பான முறையில் பிரியா விடை கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதால், இப்போது புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை (எஸ்ஜிஎம்) அடுத்த 15 நாட்களில் கூட்டவுள்ளார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர்.
அந்தக் கூட்டத்தின்போது ஏதோ பெயரளவுக்கு தலைவர் தேர்வு செய்யப்படமாட்டார். புதிய தலைவராக தேர்வு செய்யப்படுபவர் முழு அதிகாரம் உடையவராக இருப்பார். சிறப்பு பொதுக்குழுவுக்கான அழைப்பு விரைவில் அனுப்பப்படவுள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிரிக்கெட்டின் தாயகத்தை மாற்றியவர்: ஜேட்லி
கிரிக்கெட்டின் தாயகத்தை இந்தியாவுக்கு மாற்றியவர் ஜக்மோகன் டால்மியா என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஹாங்காங்கில் இருந்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாட்டு தனது தலைசிறந்த நிர்வாகியை இழந்துவிட்டது. டால்மியா, கிரிக்கெட்டின் தாயகத்தை இந்தியாவுக்கு மாற்றியவர். நான் எனது நல்ல நண்பரை இழந்துவிட்டேன். கடைசியாக கடந்த மாதம் அவரை கொல்கத்தாவில் சந்தித்தேன். உடல் நலம் தேறி வருவதாக அவர் நம்பினார். விதி வேறுவிதமாக முடிவு செய்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
கண் தானம்
கொல்கத்தாவில் ‘சஸ்ரத் கண் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்’ ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் வான்முக்தா கண் வங்கிக்கு டால்மியா தனது கண்களை தானம் செய்துள்ளதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: பிடிஐ/ஏ.எப்.பி.