

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அயர்லாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் சதம் எடுத்த போது இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெருமைக்குரிய சாதன ஒன்றை தனதாக்கிக் கொண்டார்.
கேப்டனாக சர்வதெச கிரிக்கெட்டில் தோனி 211 சிக்சர்கள் என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார், அதை இயான் மோர்கன் தற்போது கடந்து சென்று சாதனையை தனதாக்கினார்.
3வது ஒருநாள் போட்டியில் 4ம் நிலையில் இறங்கிய இயான் மோர்கன், நேற்று உயர்ந்த பார்மில் இருந்தார். 78 பந்துகளில் சதம் கண்டார். 106 ரன்களில் அவுட் ஆன மோர்கன் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசினார்.
அதாவது ஓட வேண்டிய அவசியமில்லாமலே 84 ரன்கள். இந்த சிக்சர் விளாசலில் கேப்டனாக தோனியின் 211 சிக்சர்கள் சாதனை பின்னுக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் மோர்கன் 163 போட்டிகளில் இந்தச் சாதனையைச் செய்ய தோனி 332 போட்டிகளில் இவ்வளவு சிக்சர்களை அடித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் 171 சிக்சர்களையும் பிரெண்டன் மெக்கல்லம் 121 போட்டிகளில் 170 சிக்சர்களையும் , ஏ.பி.டிவில்லியர்ஸ் 124 போட்டிகளில் 135 சிக்சர்களையும் கேப்டனாக விளாசியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர்களில் 534 சிக்சர்களுடன் எவர் கிரீன் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.