Last Updated : 03 Aug, 2020 10:29 AM

 

Published : 03 Aug 2020 10:29 AM
Last Updated : 03 Aug 2020 10:29 AM

மாநில அணிகள் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க பிசிசிஐ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் : 60 வயதுக்கு மேல் தடை உள்பட புதிய கட்டுப்பாடுகள்

மாநிலங்களில் உள்ள அணிகள் தங்களுக்கு உரிய பயிற்சி மையங்களில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க, மாநில நிர்வாகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) நேற்று வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ அமைப்பு வெளியிட்ட இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் 100 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் முதல் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வீரர்கள் பயிற்சி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் மார்ச் மாதம் முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்திலிருந்து அடுத்த சீசன் தொடங்க உள்ளது. இருப்பினும் இன்னும் பயிற்சி ஏதும் தொடங்கவில்லை.

இந்தச் சூழலில் மாநில அளவில் வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியமான அம்சமாக, பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள் ஆன்லைன் மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின்போது எந்தவிதமான இடர்ப்பாடுகள், அதாவது கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்குத் தானே பொறுப்பு ஏற்பதாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

வீரர்கள், அணியின் பிற ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, உடல்நலப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மாநில கிரிக்கெட் அமைப்புகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

அணியின் பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பேட்டிங் பயிற்சியாளர்கள், மைதானப் பராமரிப்பாளர்கள், வீரர்களுக்கு அணியில் உதவுவதற்காகப் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட், மருத்துவர், உதவியாளர்கள் ஆகியோர் 60 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதிக்கும்வரை அவர்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்தக்கூடாது.

வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அரங்கிற்குப் பயிற்சிக்கு வரும் வரை கண்டிப்பாக, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பயிற்சி தொடங்கும் முன், பயிற்சியில் பங்கேற்கும் வீரர்களிடம் அவர்களின் கடந்த 2 வார பயண விவரங்களைக் கேட்டுப் பெற வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆன்லைனில் படிவம் அனுப்பி வைக்கப்பட்டு விவரங்களை மாநில கிரிக்கெட் நிர்வாகம் பெற வேண்டும்.

பயிற்சியின்போது ஒருவேளை எந்த வீரருக்காவது, கரோனா தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயிற்சி தொடங்கும் முதல் நாள் மற்றும் 3-வது நாள் இரு பரிசோதனைகள் நடத்தப்படும். அதில் வீரர்களுக்கு நெகட்டிவ் என முடிவு வந்தால், அவர்கள் பயிற்சியில் முழுமையாகப் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

வீரர்கள் கண்டிப்பாக பயிற்சியின்போது என்95 முகக் கவசம் (வால்வு இல்லாமல்) அணிந்திருக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் வழியிலும், பொது இடங்களுக்குச் செல்லும்போதும் அணிந்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பயிற்சி தொடங்கும் முன் அதில் பங்கேற்கும் வீரர்கள் அனைவருக்கும் மாநில அணியின் தலைமை மருத்துவர் குழு, ஆன்லைன் மூலம் மருத்துவப் பயிலரங்கு நடத்த வேண்டும்.

வீரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பயிற்சி அரங்கு, மைதானத்துக்கு வருவதற்கு தங்களின் சொந்த வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஐசிசி விதிமுறையின்படி, வீரர்கள் பயிற்சியின்போது பந்தில் சலைவா (எச்சில்) பயன்படுத்தி, பந்தை பாலிஷ் செய்வது தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x