ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன ஸ்பான்ஸர் தொடர்கிறது- கரோனாவால் புதிய மாற்றங்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதி ஆட்டம் நடக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுநாள்வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இறுதி ஆட்டம் அனைத்தும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைதான் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) நடத்தப்பட உள்ளது.

ஆனால், ஐபிஎல் போட்டிக்கான அனுமதி கேட்டு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பம் மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கிறது. இந்தியாவில் சீனப் பொருட்கள் புறக்கணிப்பு, சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனத்தின் ஸ்பான்ஸர் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி வருவாய் உள்ள போட்டி என்பதால் எப்படியாவது நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் சூழல் அதற்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.

ரசிகர்களை அனுமதிக்காமல் மூடப்பட்ட மைதானங்களில் போட்டியை நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டது. குறிப்பாக மும்பையில் நடத்தத் திட்டமிட்டபோது, மும்பையில் கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்ததால், அது கைவிடப்பட்டது.

இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்வு ஐக்கிய அரபு அமீரகமாகவே இருந்தது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியைத் நடத்தும் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

  1. 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் போட்டி 53 நாட்கள் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
  2. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் அனுமதிக்காக ஐபிஎல் நிர்வாகம் காத்திருக்கிறது. அடுத்த இரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம்.
  3. இதற்கு முன் நடந்த போட்டிகள் நடந்த நாட்களைவிட கூடுதலாக 3 நாட்கள் சேர்த்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆட்டங்களில் 10 போட்டிகள் இரு ஆட்டங்கள் நடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  4. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் 24 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மாற்று வீரர்கள் வைத்துக்கொள்வதில் கட்டுப்பாடு இல்லை. எத்தனை மாற்றுவீரர்கள் வேண்டுமானாலும் தேவைப்பட்டால் எடுக்கலாம்.
  5. போட்டிகள் அனைத்தும் 30 நிமிடங்கள் முன்கூட்டியே தொடங்குகின்றன. அதன்படி மாலை நடக்கும் போட்டி 4 மணிக்குப் பதிலாக 3.30 மணிக்கே (இந்திய நேரப்படி) தொடங்கும். இரவு நடக்கும் போட்டி 8 மணிக்குப் பதிலாக 7.30 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கும். ஐபிஎல் போட்டியில் சீனாவின் விவோ நிறுவனம் ஸ்பான்ஸராகத் தொடர்கிறது.
  6. மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 3 அணிகள் 4 போட்டிகள் கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும். வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை டாடா குழுமம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
  7. அடுத்த 7 முதல் 10 நாட்களில் அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகத்தினருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸரான சீனாவின் விவோ நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ.440 கோடி ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்குச் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்த ஒப்பந்தம் வரும் 2022-ம் ஆண்டுதான் முடிகிறது .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in