

இலங்கைக்கு எதிரான இரு போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல் டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ஏற்கெனவே ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் ராம்தின், பொறுப் பேற்ற 15 மாதங்களில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹோல்டர் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹோல்டரை கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்தனர். அதை இயக்குனர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாயிட் கூறுகை யில், “கேப்டனை மாற்றுவதற்கும், இளம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஹோல்டர் வழிநடத்து வதற்கு ஆதரவு கொடுப்பதற்கும் இதுதான் சரியான தருணம் என நம்பினேன்” என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபர் 1-ம் தேதி இலங்கை செல்கிறது. அங்கு இரு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு அக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரையில் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, இரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
அணி விவரம்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிரத்வெயிட் (துணை கேப்டன்), தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிரத்வெயிட், டேரன் பிராவோ, ரஜீந்திர சந்திரிகா, ஷேன் டவ்ரிச், ஷெனான் கேப்ரியேல், ஷாய் ஹோப், தினேஷ் ராம்தின், கெமர் ரோச், மார்லான் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், ஜோமெல் வேரிகன்