

தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக்(டிஎன்பிஎல்) சார்பில் 2020ம் ஆண்டில் நடத்தப்படும் 5-வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அல்லது 2021-ம் ஆண்டு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அணி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 5-வது சீசன் டி20 தொடர் ஜூன் ஜூலை மாதத்தில் திட்டமி்ட்டப்படி நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்திருப்பதால், போட்டி நடத்தும் திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், கோவை ஆகிய நகரங்களில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஒத்திவைத்து கடந்த மே மாதம் முடிவு செய்யயப்பட்டது.
மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தால் ஜூலை இறுதி அல்லது செப்டம்பரில் நடத்தப்படலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வீரர்களின் உடல்நிலை, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போட்டி நடத்தப்பட இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் மாதம் நடத்தப்பட இருந்த போட்டித் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் “ டிஎன்பிஎல் 5-வது சீசன் டி20 தொடரை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்த ஏதுவான சூழலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எதிர்பார்த்தது.
ஆனால், தமிழகத்தில் தற்போது நிலவும் கரோனா வைரஸ் பரவலால், தற்போது டிஎன்பிஎல் தொடரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 5-வது சீசன் தொடரை வரும் நவம்பர் மாதம் அல்லது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவது குறித்த வாய்ப்புகளை ஆய்வு செய்வோம்” எனத் தெரிவித்தார்.
டிஎன்பிஎல் டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.