

இந்திய அணி நிர்வாகம் பேட்டிங்கில் எந்த வரிசையில் என்னை களமிறக்கினாலும், அதில் விளையாடத் தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் 3-ம் நிலை வீரராகவும், மற்றொரு போட்டியில் 5-ம் நிலை வீரராகவும் ரஹானே களமிறக்கப்பட்டார். அதனால் பேட்டிங்கில் அவருக்கு பொருத்தமான இடம் 3-வது நிலையா அல்லது 5-வது நிலையா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரஹானே கூறியிருப்பதாவது:
இலங்கைத் தொடரில் 3-வது வீரராக மகிழ்ச்சியாக விளையாடினேன். சதமும் அடித்தேன். அந்தப் போட்டியில் இந்தியாவும் வெற்றி கண்டது. எனினும் அணி நிர்வாகம் எந்த வரிசையில் களமிறக்கினாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனது வழக்கமான பேட்டிங் வரிசையைத் தாண்டி மற்ற வரிசைகளில் களமிறங்குவதையும் விரும்புகிறேன். அதுதான் எனக்கு வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
எந்த இடத்தில், எந்த சூழலில் என்னை களமிறக்கினாலும் நான் பேட் செய்வேன் என அணி நிர்வாகமும், கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதையே அது காட்டுகிறது. எந்த சூழலையும் என்னால் சமாளித்து அணியை சரிவிலிருந்து மீட்க முடியும் என்பது எனக்கும் அணிக்கும் நல்லதுதான். பேட்டிங் வரிசையைப் பற்றி நான் பெரிய அளவில் சிந்திப்பதில்லை” என்றார்.